
பாடும் நிலா பாலு என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று.
இளையராஜாவோடு சேர்த்து எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடனும் தான் தமிழர்களின் பொழுதுகள் விடிகின்றனர், முடிகின்றன. பல ஆயிரம் பாடல்களை தந்திருக்கும் பாடும் வானம்பாடி எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சாதனைப்பாடல்தான் ‘மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…’.
கேளடி கண்மணி படம் வந்த சமயத்தில் டேப் ரெக்கார்டரில் திரும்பத் திரும்ப ரிவைண்ட் செய்து எஸ்.பி.பி. மூச்சுவிடும் சத்தத்தை ரசித்தார்கள் ரசிகர்கள்.
கடற்கரையில் ராதிகாவுடன் நடந்து கொண்டே மூச்சுவிடாமல் பாடும் அந்தப்பாடல் மிகப்பிரபலம்.

மேடைப்பாடர்கள் பலரும் எஸ்.பி.பி. மாதிரியே மூச்சை அடக்கிப் பாடி வருகிறார்கள். விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எஸ்.பி.பி. ஒருமுறை சிறப்பு விருந்தினராக வந்திருந்தபோது, அப்போது ஒருவர் இந்தப்பாடலை மூச்சுவிடாமல் பாடி முடித்ததும், ‘’ஏன் இவ்வளவு சிரத்தை எடுத்துப்பாடுற..?. நான் பாடுனேன் என்பதற்காக அப்படியே பாடணும்னு அவசியம் இல்ல. நான்கூட ரெக்கார்டிங்கில் சில டெக்னிக் யூஸ் பண்ணி பாடுனேன்’’என்று சொல்லி இருந்தார்.
அந்த பாடல் பதிவின் போது கங்கை அமரனும் இருந்துள்ளார். ஆனால் மூச்சு விடாமல் பாடும் இந்த டெக்னிக்கை பாலுவே செய்துள்ளார். மூச்சை அடைக்கிப் பாடாமல் டெக்கிக்காக பாலு பாடியதை அவரது மகன் எஸ்.பி.சரணும் ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருக்கிறார்.

எது எப்படியோ, பாடலில் ஒரு புதுமைதான் அந்தப்பாடல். ’’அந்தப்பாடல உங்களால எப்படி மூச்சு விடாம பாட முடிஞ்சது?’’ எனும் கேள்விக்கு, பெரிதாகச் சிரித்துவிட்டு, அந்த பாடலுக்கு முன்னே ராஜாவின் இசையில் மூச்சுவிடாம ஒரு பாட்டு பாடியிருக்கேன். ‘கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ, எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…’என்ற பாட்டை பாடியிருக்குறேன்’’என்றார்.

பாடும் வானம் பாடியின் மூச்சு நின்ற ஐந்தாவது ஆண்டு தினத்தில் இந்த நினைவுகள்.