
சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு பணியில் இருந்து வந்த காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிரிக்கெட் கடவுள் என்று கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவரின் பாதுகாப்பு பணியில் எஸ்.ஆர்.பி.எஃப் எனும் மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஜவான் பிரகாஷ் கப்டே பணிபுரிந்து வந்துள்ளார். இவர் சில தினங்கள் பணியில் இருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஜாம்நர் நகருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். பாதுகாப்பு பணிக்காக தனக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்திருக்கிறார்.

சச்சின் பாதுகாவலர் தற்கொலை செய்துகொண்ட விசயம் காட்டுத்தீயாக பரவியதும் உள்ளூர் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஜவான் பிரகாஷ் கப்டே திருமணமானவர் என்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும், வயதான பெற்றோரும் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் ஜவான் பிரகாஷ் கப்டே தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று போலீசார் நினைக்கின்றனர். அடுத்த கட்ட விசாரணையில் அது உறுதியாகிவிடும் என்கிறது மகாராஷ்டிரா போலீஸ் வட்டாரம்.