சாகித்ய அகாடமி விருது இந்த ஆண்டு வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்ற புத்தகத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்கள். சலபதி என்று அறியப்படும் ஆ.இரா.வேங்கடாசலபதி பல ஆண்டுகளாக வ.உ.சி குறித்தும் பாரதியார் குறித்தும் ஆய்வு செய்து வருகின்ற பேராசிரியர். தமிழ்நாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி, காங்கிரஸ் கட்சி, திராவிட இயக்கம் போன்றவற்றின் தாக்கம் குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் வழங்கியவர்.
வ.உ.சி. குறித்த அவருடைய இந்த வரலாற்று ஆய்வு நூல் தனது தலைப்பிலேயே கவனம் பெறுகிறது. ஆங்கிலேயர்கள் திருநெல்வேலி கலகம் என்று பதிவு செய்திருப்பதை, திருநெல்வேலி எழுச்சி என்று தலைப்பிட்டிருக்கிறார் சலபதி. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தனிப்பட்ட முறையில் சிறைவாசத்தில் அதிகத் துன்பங்களை அனுபவித்தவர்களின் வ.உ.சி.யும் அவரது நண்பர் சுப்பிரமணிய சிவாவும் ஆவார்கள். திருநெல்வேலி எழுச்சியின் விளைவாகவே ராஜதுரோக குற்றச்சாட்டுக்குள்ளாக்கப்பட்டு அவர்கள் சிறைப்பட்டார்கள்.
வெள்ளைக்காரர்களுக்கு எதிராக கப்பலோட்டிய தமிழரான வ.உ.சிதம்பரனார், சிறையில் செக்கிழுத்தார், கல் உடைத்தார். சுதேசி கப்பல் நிறுவனத்தின் பங்குதாரர்களான இந்தியர்களே அவர் மீது வழக்கு தொடுக்கும் நிலையும் உருவானது. சொத்துகளை இழந்தார். சிறைவாசத்திற்குப் பிறகான அவரது வாழ்வு துயரம் நிறைந்த பகுதியாகும். அப்பழுக்கற்ற விடுதலைப் போராட்ட வீரரான வ.உ.சி. பற்றிய ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திப்பது, தமிழில் புதிய ஆய்வுகளுக்கும், ஆய்வாளர்களுக்கும் ஊக்கம் தரக்கூடியதாக இருக்கும்.
எந்த விருதாக இருந்தாலும் அது யாருக்கு-எந்தப் புத்தகத்திற்கு வழங்கப்படுகிறது என்பது குறித்த ஆதரவுக் கருத்துகள் போலவே எதிர்ப்புக் கருத்துகளும் வெளிப்படுவது இயல்பு. அதுவும், தமிழ் இலக்கியச் சூழலில் நிலவும் குழு மனப்பான்மையினால் எந்த ஒரு படைப்பாக இருந்தாலும் அதற்கு எந்தவொரு விருது வழங்கப்படும்போதும் அந்தப் படைப்பாளிக்கு பூச்செண்டுகளும் வரும். அவர் மீது கற்களும் எறியப்படும். அத்துடன், அவரைவிட இவர் நன்றாக எழுதியிருக்கிறார், அதைவிட இந்தப் புத்தகம் நன்றாக இருக்கிறது என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்படும். நோபல் பரிசாகவே இருந்தாலும், போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளின் தன்மையும், அதன் மீதான விருதுக்கானத் தேர்வுக் குழுவின் பார்வையுமே தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.
தமிழ்ப் படைப்புலகத்தைப் பொறுத்தவரை சிறுகதைகள், புதினங்கள், கவிதைகள் போன்ற படைப்பிலக்கியங்களும், அபுனைவு எனப்படுகின்ற கட்டுரை, தன்வரலாறு, ஆய்வு நூல்கள் ஆகியவையும் நிறையவே உள்ளன. புதிய புதிய முயற்சிகளும் காலந்தோறும் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், விருதுகள் என்று வரும்போது பிற இந்திய மொழிகளுக்கு கிடைக்க்கூடிய முக்கியத்துவம் தமிழுக்கு உடனடியாகக் கிடைப்பதில் நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. அதற்கு மொழியாதிக்க மனப்பான்மையும், உள்ளூர் நண்டுகளின் செயல்பாடுகளும் காரணங்களாக அமைந்துவிடுகின்றன. இவற்றை மீறித்தான் தமிழின் எந்தவொரு படைப்பும் விருதுகளைப் பெற முடிகிறது.
சாகித்ய அகாடமி விருதினைப் பொறுத்தவரை இடதுசாரி படைப்பாளிகள் ஒரு கட்டத்தில் முன்னிலைப் பெறுவதும், காலச்சுவடு பதிப்பகப் படைப்பாளர்கள் எனப்படுவோர் இன்னொரு கட்டத்தில் முன்னிலைப் பெறுவதுமாக, இருதரப்புக்குமான போட்டிகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த இரு தரப்புமே திராவிட இயக்கப் படைப்பாளிகள் மீதான ஒவ்வாமையுடன் இருப்பதும், திராவிட மாடல் அரசில் இந்த இரண்டு தரப்பும் உங்கள் துறை சார்ந்த செல்வாக்குடன் கோலோச்சுவதும் நட்புமுரணா, நகைமுரணா என்று வகைப்படுத்த முடியாத ஆச்சரியம்.
திராவிட இயக்கம் ஒரு போதும் படைப்பாளிகளை இப்படி பேதம் பார்ப்பதில்லை. படைப்புகளில் உள்ள நாயகர்களிடமும் பேதம் பார்ப்பதில்லை. காங்கிரஸ் இயக்கத்தவரான வ.உ.சி. தன் சிறைவாசத்துக்குப் பிறகான வாழ்நாளில் நீதிக்கட்சித் தலைவர்களுடன் மேடைகளில் பங்கேற்றார். பெரியாருடன் நெருக்கமாமக இருந்தார். அவருக்கு தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கோரிக்கையுடன் கடிதமும் எழுதியிருக்கிறார். வ.உ.சி.யின் நினைவைப் போற்றி, அவருடைய வாரிசுகளுக்கு அரசுப் பணியும் தந்தது திராவிட அரசு. வ.உ.சி.யின் நண்பரான தியாகி சுப்பிரமணிய சிவாவுக்கு மணிமண்டபம் அமைத்ததும் திராவிட அரசுதான்.
எழுத்துலகில் இமயமாகத் திகழ்ந்த காலம் வரை திராவிட இயக்கம் மீதான ஒவ்வாமையுடன் அதன் தலைவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்தவர் ஜெயகாந்தன். ஆனால், அவருடைய சிறுகதைகள்-புதினங்கள் ஆகியவை தமிழில் புதுப் பாய்ச்சலை உண்டாக்கிய படைப்புகள் என்பதை திராவிட இயக்கம் உணர்ந்தே இருந்தது. தனிப்பட்ட விமர்சனங்களைப் புறந்தள்ளி அவருடைய எழுத்துகளைப் பாராட்டியது. ஜெயகாந்தனும் தனது இறுதிக்காலத்தில் திராவிட இயக்கத் தலைவர்களின் நிழலில் இளைப்பாறினார்.
படைப்பாளர்களின் நோக்கம் உயரிய விருதாக இருக்கும். படைப்புகளின் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சியேயாகும். அதைத் தங்கள் எழுத்துகளால் சாதித்தவர்கள் திராவிட இயக்கப் படைப்பாளிகள். இயக்கத்தின் தலைவர்களே சிறந்த படைப்பாளிகளாக இருந்தனர். கடைக்கோடி மக்கள் வரை அவர்களின் படைப்புகள் சென்று சேர்ந்தன. அந்த மக்கள் அவர்களிடம் நாட்டை ஆளும் அரசு எனும் உயர்ந்த விருதை ஒப்படைத்தார்கள். வருங்காலத்தில் இது குறித்த ஆய்வு நூலையும் யாரேனும் எழுதி, சாகித்ய அகாடமி விருதைப் பெறலாம்.