மக்களவைத்தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தால், வாக்கு வங்கி 25 சதவீதத்துக்கும் கீழாக குறைந்தால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் நெருக்கடி ஏற்படும். ஒருங்கிணைந்த அதிமுகவைக்கோரி கலகக்குரல்கள் எழும் என்று அரசியல் விமர்சகர்கள் தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறாத நிலையில் கலகக்குரல்கள் எழுந்துள்ளன.
அதிமுக இப்போதிருக்கும் நிலையிலேயே 2026ல் சட்டமன்ற தேர்தலை சந்தித்தால் அடுத்து கட்சியை மீட்பது என்பதே பெரும் பாடாகிவிடும் என்று அதிமுக சீனியர்கள் பலரும் கவலையில் உள்ளனர்.
அதிமுகவுக்கு வெளியே இருக்கும் சசிகலாவும், ஓபிஎஸ்சும் இதையே சொல்லி வருகின்றனர். இதனால் அனைவரையும் ஒன்று பட வைக்க வேண்டுமென்று ‘அதிமுக ஒருங்கிணைப்பு குழு ‘ ஒன்று உருவாகி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், இதெல்லாம் ஒரு குழுவா? என்று போகிற போக்கில் கமெண்ட் அடித்துவிட்டு செல்கிறார் இபிஎஸ்.
ஆனாலும் சீனியர்கள் இந்த விவகாரத்தை விடுவதாக தெரியவில்லை.
நேற்று சேலத்தில் எடப்பாடியின் வீட்டுக்குள்ளேயே வைத்து கலகக்குரலை எழுப்பியிருக்கிறார்கள் 6 முன்னாள் அமைச்சர்கள். செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய 6 பேரும்தான் சுமார் இரண்டரை மணி நேரம் கேள்விக்கணைகளால் எடப்பாடியை உலுக்கி எடுத்திருக்கிறார்கள் என்கிறார் அரசியல் விமர்சகர் எஸ்.பி. லட்சுமணன்.
’’தொடர் தோல்விகள் கட்சிக்கு நல்லதல்ல, பிரிந்து இருப்பதால்தான் இந்தநிலை. இனியும் இது தொடர்ந்தால் கட்சிக்காரர்கள் வேலை செய்ய மாட்டார்கள். இந்தத் தேர்தலிலேயே கிளைக்கழகச் செயலாளர்களே வேலை பார்க்கவில்லை. பிரிந்தவர்கள் ஒன்று சேர்வோம். இனியும் தாமதிக்கக் கூடாது’’ என்று 6 பேரும் வாதங்களை முன்வைத்தனர்.
ஆனால், எடப்பாடி கடைசிவரை உறுதியாக இருந்து, ’’அதெல்லாம் சரிப்பட்டு வராது’’ என்றே சொல்லியிருக்கிறார். அதே போன்று, ஆறு பேரும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க, வாதங்கள் தடித்து முடிவு எட்டப்படாமலேயே வெளியேறியிருக்கிறார்கள் ஆறு பேரும் என்கிறார் லட்சுமணன்.
அடுத்த வாரம் மீண்டும் எடப்பாடியை சந்தித்து தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்த இருக்கிறது இந்த ஆறு பேர் குழு. அப்போது குழுவினரின் எண்ணிக்கை அதிகமாகலாம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
நாரதர் கலகம் மட்டுமல்ல; ஆறு பேர் கலகமும் நன்மையில் முடியும். முடிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அதிமுகவினர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிச்சாமி?