
அதிமுகவின் அதிகாரம் மையமாக உள்ளார் எடப்பாடியின் வலதுகரம் சேலம் இளங்கோவன் என்று 2020 இல் இருந்தே அதிமுகவுக்குள் புகைச்சல் இருந்து வருகிறது. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது அண்மையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய எடப்பாடியின் பேச்சு.
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரராக இருந்தவருக்கு அப்போது ஆத்தூர் எம்.எல்.ஏ. மஞ்சினி முருகேசன் அறிமுகம் கிடைக்க, அவர் மூலமாக அரசியலில் பயணித்து வந்தார். கட்சியில் இளங்கோவனின் செயல்களைக் கண்டு அவருக்கு மா.செ. பொறுப்பு வழங்கினார் ஜெயலலிதா. 2006ல் பனைமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிடவும் வாய்ப்பு கிடைத்தது.
அந்த தேர்தலில் அவர் தோற்றதில் மா.செ. பொறுப்பும் பறிக்கப்பட்டுவிட்டது. இந்த நேரத்தில்தான் அப்போது அதிமுகவில் அமைப்புச் செயலாளராக இருந்து வந்த எடப்பாடியின் அறிமுகம் கிடைத்து அவருடன் பயணத்தை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் எடப்பாடியின் வலது கரம் ஆனார். எடப்பாடிக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி கிடைத்ததும் சேலம் மாவட்ட அதிமுகவில் இளங்கோவனின் கை ஓங்கியது.

சசிகலாவின் உறவினர் கலியமூர்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரின் மூலமாக சசிகலாவிடம் அறிமுகமாகி பின்னர் தினகரன், ஓபிஎஸ் என்று அனைத்து வட்டத்திலும் செல்லாக்காக வலம் வந்தார். இதனால் ஜெ., பேரவை மா.செ., கூட்டுறவு வங்கி தலைவர் என்று அடுத்தடுத்து முன்னேறினார்.
ஜெ., மறைவுக்கு பின்னர் எடப்பாடி முதல்வர் ஆனதும் ஒட்டுமொத்த அதிமுகவிலும் இளங்கோவனின் கை ஓங்கியது. அமைச்சர்களையும், எம்.எல்.ஏக்களையும் கவனிக்கும் பொறுப்பும் அவரிடம் தான் உள்ளது என்று அப்போது பேசப்பட்டது.
அப்போதைய சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளையும் இளங்கோவன் வசமே ஒப்படைத்திருந்தார் எடப்பாடி. இளங்கோவனும் எடப்பாடியின் நம்பிக்கையை காப்பாற்றினார். 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் வெற்றியை தேடித்தந்தார். இதனால் அதிமுகவில் இளங்கோவனின் செல்வாக்கும் மேலும் உயர்ந்தது. அதிமுகவின் அதிகார மையமாகவே மாறிப்போனார்.
செல்வாக்கு உயர உயர சிக்களும் சர்ச்சைகளும் அதிகரித்தன. கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் இளங்கோவனின் பெயர் முக்கியமாக அடிபடுகிறது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இளங்கோவனின் வீடு மற்றும் அவரது தொடர்பான 36 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. இந்த ரெய்டில் வருமானத்திற்கு அதிகமாக 131% சொத்து சேர்த்ததாக சொல்லி 10 சொகுசு கார்கள், 2 வால்வே பேருந்துகள், 29.77 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

4.4 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே பூர்வீக சொத்தாக கொண்ட இளங்கோவனுக்கு இத்தனை சொத்துக்கள் குவிந்தது எப்படி? சர்ச்சைகள் வெடித்தன. கடந்த அக்டோபர் மாதத்திலும் வருமானத்திற்கு அதிகமாக 3 கோடியே 78 லட்சத்து 31 ஆயிரத்து 755 ரூபாய் சொத்துக்கள் சேர்த்தகாக சொல்லி இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடந்தது.
பாஜகவுடன் கூட்டணிக்கு எடப்பாடியை சம்மதிக்க வைக்கவே, அவரின் வலதுகரமான இளங்கோவன் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது என்ற விமர்சனம் உள்ளது.
இது ஒருபுறமிருக்க, அண்மையில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கட்சிக்கு எப்படி விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பாடமெடுத்த எடப்பாடி, ‘’சேலம் இளங்கோவனை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அவரை மாதிரி விசுவாசமாக இருங்க’’ என்று சொல்லி இருக்கிறார்.
இதைக்கேட்டதும் கே.பி.முனுசாமிக்கு ரத்தம் கொதித்திருக்கிறது. ’’அதிமுக ஒன்றும் தனிநபர் கட்சியா என்ன?’’ என்று கேட்டு இருக்கிறார். அதைக்கேட்டதும் அரண்டு போயிருக்கிறார் எடப்பாடி என்பதை புரிந்துகொண்ட கே.பி.எம்., அவரைச் சரி செய்வதற்காகவே, ‘’உங்கள் நிழலாக உள்ளார் இளங்கோவன். அவரை எப்படி பின் தொடரமுடியும்?’’ கேட்டு கலகலப்பாக்கி உஷ்ணத்தை குறைக்க முயன்றிருக்கிறார். அவர் நினைத்தது மாதிரியே, அவர் பேசியதைக்கேட்டு மா.செக்களும் சிரித்து அந்த இடத்தை கலகலப்பாக்கி இருக்கிறார்கள்.
ஆனாலும் தன் நிழலுக்கு எதிர்க்குரல் எழுந்து விட்டதால் இறுக்கமான முகத்துடனேயே இருந்திருக்கிறார் எடப்பாடி. விபரம் அறிந்ததில் இருந்து இளங்கோவனும் படு அப்செட்டில் இருக்கிறாராம்.