கல்விநிலையங்களை காவிமயமாக்கும் மத்திய பா.ஜ.க அரசின் செயல்பாடுகளால் பல்கலைக்கழகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுவருகின்றன. சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தொடர்பான பல புகார்கள் வெளிப்பட்டும் துணைவேந்தரையும், பதிவாளரையும் பாதுகாக்கும் பணியை பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் தரப்பு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்று பெரியார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விப் புலம் சார்ந்தவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பகத் துறையின் இணைப் பேராசிரியராக இருப்பவர் இரா.சுப்பிரமணி. நெருக்கடி நிலைக் காலத்தில் தமிழ்நாட்டின் பத்திரிகைகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டின் அரசியல்-சமுதாயம்-கல்வித் துறை சார்ந்த புத்தகங்களைத் தொடர்ந்து எழுதி வரும் சமூக அக்கறை மிக்க எழுத்தாளர். மெக்காலே கல்வி முறை பற்றி 2007ல் அவர் வெளியிட்ட புத்தகம், 2023ல் கூடுதல் விவரங்களுடனும், பாரம்பரிய-பழமைவாத கல்விமுறைக்கு எதிராக மெக்காலேவின் கல்வி முறை எப்படி இருக்கிறது என்ற தகவல்களுடனும் மீண்டும் வெளியிடப்பட்டது. 2022ல் பெரியாரின் போராட்டக் களங்கள் குறித்த புத்தகத்தையும் இணைப் பேராசிரியர் முனைவர் சுப்பிரமணி வெளியிட்டிருந்தார்.
இந்த இரண்டு புத்தகங்களையும் பல்கலைக்கழகத் துணைவேந்தரின் அனுமதி பெறாமல் நூலாசிரியரான இணைப் பேராசிரியர் எழுதி வெளியிட்டுள்ளார் என்றும், இது நடத்தை மீறல் என்றும் குற்றம்சாட்டி கடந்த 2023ஆம் ஆண்டு அவருக்கு மெமோ அளிக்கப்பட்டது. துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாகத்தின் இத்தகைய செயல்பாட்டுக்கு அப்போதே கண்டனங்கள் வெளிப்பட்டன. தனக்கு அளிக்கப்பட்ட மெமோ குறித்து முனைவர் சுப்பிரமணி தெளிவுபடுத்திவிட்ட நிலையில், கடந்த 18ந் தேதி அதே புத்தகங்களுக்காக அவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையையும் கடும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.
பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் மட்டுமின்றி, பல்கலைக்கழகத்துடன் தொடர்பில்லாத பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்கு காவி வண்ணம் பூசுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில், சமூக அக்கறையுடனும் முற்போக்கு சிந்தனைகளுடனும் ஆய்வு மனப்பான்மையுடனும் செயல்படக் கூடியவர்களை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடந்து முடிந்துள்ள நிலையில், பேராசிரியர் சுப்பிரமணிக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை எனக் கண்டித்துள்ளது அப்பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம்.
80க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்திருப்பவர் பேராசிரியர் சுப்பிரமணி. தற்போது விளக்கம் கோரப்பட்டுள்ள விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள இரண்டு புத்தகங்களும் ஏற்கனவே பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்புகள்தான். பெரியார் பல்கலைக்கழக விதி 14(2)ன்படி அதற்கு அனுமதி பெற வேண்டிய தேவையும் இல்லை என்பதை ஆசிரியர் சங்கத்தினர் சுட்டிக்காட்டுகின்றனர். பெரியார் பெயரிலான பல்கலைக்கழகத்தில் பெரியார் பற்றிய புத்தகமும், கல்வி முறை குறித்த புத்தகமும் ஒருவர் எழுதினார் என்பதற்காக, அதுவும் இதழியல் துறையைச் சார்ந்த பேராசிரியர், பல்கலைக்கழகத்தின் பெரியார் இருக்கை, அண்ணா இருக்கை, கலைஞர் கருணாநிதி ஆய்வு மையத்தின் இயக்குநர் பொறுப்பில் உள்ளவர்- பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர் எழுதியிருக்கிறார் என்பதற்காக அவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது அறிவுத்தளத்தில் நடத்தப்படும் வன்முறையாகும்.
அரசின் சார்பில் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இணைப் பேராசிரியர் முனைவர் சுப்பிரமணிக்கு உருவாக்கப்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து அவரை மீட்க வேண்டியது அரசின் கடமையும் பொறுப்புமாகும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் மாநில அரசின் அதிகாரத்திற்கு எதிரான செயல்பாடுகளும், தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் இழிவு செய்யும் போக்கும் ஆளுநர் தொடங்கி பா.ஜ.க. தரப்பினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் மாநிலத் தலைவரை சிண்டிகேட் உறுப்பினராக ஆளுநர் நியமித்துள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் அரசால் சிண்டிகேட் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பவருக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது என்பது மாநில அரசுக்கு நேரடியாக விடப்பட்டுள்ள சவாலாகும்.
கல்வியை காவிமயமாக்கும் போக்கினால்தான் புதிய கல்விக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. அதே காவிமயத்தை உயர்கல்வித் துறையில் நடைமுறைப்படுத்துவதில் ஆளுநர் மூலமும் அவரது கட்டுப்பாட்டிற்குட்பட்ட நிர்வாகத்தின் மூலமும் வேகம் காட்டுகிறது பா.ஜ.க.! சவாலை எதிர்கொள்ளுமா உயர்கல்வித்துறை?