ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களை கோவிலுக்குள் நுழைய விடாததால் ஏற்பட்ட கலவரத்தால் போர்க்களமாக காட்சி அளிக்கிறது தீவட்டிப்பட்டி. இதனால் ஏற்பட்ட பதற்றம் தொடர்ந்து நீடிப்பதால் பொதுமக்கள் நிம்மதியாக வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் அங்கே நிலவுகிறது.
சேலம் மாவட்டத்தில் காடையாம்பாட்டி தாலுகாவில் உள்ள தீவட்டிப்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வன்னியர் சமூகத்தினர் மட்டுமே தொடர்ந்து இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவினை நடத்தி வந்துள்ளனர். ஆதி திராவிட சமூகத்தினரும் இந்த கோவில் திருவிழாவினை ஏற்று நடத்த முயன்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன் தினமும் நடந்த திருவிழாவில் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்து, திருவிழாவை நடத்தச் சென்றுள்ளனர். அதற்கு வன்னியர் சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழலில், விபரம் அறிந்து வந்த வட்டாட்சியர் , இரு தரப்பினரையும் வைத்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். அந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டாததால், மேற்கொண்டு அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க, திருவிழாவை நிறுத்திவிட்டு, கோவிலுக்கும் பூட்டு போட்டுள்ளார்.
இதில் ஏற்பட்ட ஆத்திரத்தால் தீவட்டிபட்டியில் உள்ள வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தி பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் பழக்கடை, நகைக்கடை தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன.
உடனே அங்கே போலீசார் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்துள்ளனர். அதன்பின்னர் ஆதி திராவிட சமூகத்தினர் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்ததால், மாற்றுப்பாதை அமைத்து போக்கு வரத்து பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளது.
கலவர பூமியாக இருப்பதால், தீவட்டிப்பட்டி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடந்த இந்த சம்பவம் குறித்து, விசிக நிர்வாகி வன்னி அரசு, ‘’தீவட்டிபட்டியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் ஒவ்வொரு ஆண்டும் இந்து-பறையர்கள் பங்கெடுப்பது வழக்கம்.
மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் தீவட்டிபட்டி இந்து பறையர்கள் பங்கெடுத்து வந்துள்ளனர். ஆனால், இந்த ஆண்டு சாதி இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாரியம்மன் கோவிலுக்குள் அனைத்து இந்துக்களுக்கும் வழிபாட்டு உரிமையை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.