தன்னுடைய விசுவாசியாக இருந்தாலும் கூட, ஒத்துவரவில்லை என்றதும் அதிர்ச்சி பரிசை அளித்திருக்கிறார் பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசி வெங்கடாசலம். அதனால்தான் ஜெயலலிதா இருந்த போது அவரிடம் வெங்கடாசலத்தை அறிமுகப்படுத்தி சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட சீட் வாங்கிக்கொடுத்தார் எடப்பாடி. அந்த தேர்தலில் வெங்கடாசலம் வெற்றி பெற்றதும், இரண்டாவது முறையாக அதே தொகுதியில் சீட் வாங்கித்தந்தார் பழனிசாமி.
தனக்கு ரொம்ப விசுவாசமாக இருந்து தான் சொன்னதை எல்லாம் செய்து வந்ததால் மா.செ. நாற்காலியிலும் வெங்கடாசலத்தை உட்கார வைத்தார் பழனிசாமி.
ஜெ.,வின் மறைவுக்கு பின்னர் கூவத்தூரில் பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அதிமுகவில் வெங்கடாசலத்தின் கை ஓங்கியது. வெங்கடாசலம் எது சொன்னாலும் அதை தட்டாமல் கேட்கும் மன நிலையில் இருந்து வந்தார் பழனிசாமி. இதனால் கட்சியில் வெங்கடாசலத்தின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு தொகுதியை மீண்டும் குறிவைத்தார் வெங்கடாசலம். ஆனால், கூட்டணியில் இருந்த பாமகவும் அந்த தொகுதியைத்தான் குறி வைத்தது. பழனிசாமியும் தன் விசுவாசிக்காக எவ்வளவோ முயன்றும், பாமக பிடிவாதமாக இருந்துவிட்டது. இதனால் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்ட வெங்கடாசலம் திமுக வேட்பாளரிடம் தோல்வியுற்றார். ஆனாலும் மா.செ. பொறுப்பில் தொடர்ந்தார் வெங்கடாசலம்.
ஆட்சி பறிபோனதில் இருந்து வெங்கடாசலத்தின் மீதான புகார்களை கட்சியினர் அடுக்கிக்கொண்டே வந்தனர். ஆனாலும் இந்த புகார்கள் எல்லாம் பழனிசாமியின் காதில் எட்டாதவாறு பார்த்துக்கொண்டார் வெங்கடாசலம்.
இந்நிலையில் தற்போது 2026 சட்டமன்ற தேர்தலுக்காக ஆயத்தமாகும் வேளைகளில் இருப்பதால், மா.செக்களின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா? என்பதை அறிந்து அறிக்கை தரும்படி கட்சியின் சீனியர்கள் அடங்கிய ஆய்வுக்குழுவிடம் கேட்டிருந்தார் பழனிசாமி. தன் சொந்த மாவட்டம் சேலத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரத்திடம் கேட்டிருந்தார் பழனிசாமி. அவர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் வெங்கடாசலத்தை கட்சியில் இருந்து நீக்கம் செய்திருக்கிறார்.
பல பகுதிகளில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் பலர் இன்றைக்கும் ஆட்சி அதிகாரம் இல்லை என்றாலும் கூட, நெடுஞ்சாலை ஒப்பந்தப்பணி உள்ளிட்ட பணிகளை எடுத்து செய்து சம்பாதித்து வருகின்றனர். அப்போதுதான் பொதுக்கூட்டம் உள்ளிட்ட கட்சிப்பணிகளுக்கும் கவனிக்க முடியும். ஆனால் வெங்கடாசலமோ, கட்சிப்பணிகள் தவிர வேறு எந்தப்பணிகளும் அதிமுகவினர் செய்யக்கூடாது என்று தடுத்து வந்திருக்கிறார். இதை எல்லாம் சிங்காரத்திடம் சொல்லி புலம்பி இருக்கிறார். வெங்கடாசலத்தின் மீது அடுக்கடுக்கான குற்றங்களை முன்வைத்து அவரை மா.செ. பொறுப்பிலிருந்த மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.
சிங்காரம் இதை அறிக்கையாக பழனிசாமியிடம் கொடுத்திருக்கிறார். தேர்தல் காலம் நெருங்கிவிட்ட நிலையில் தன் சொந்த மாவட்டத்தில் இப்படி அதிருப்தி நிலவினால் அது தனக்கு பாதகமாக அமையும் என்பதால் விசுவாசி என்பதைக்கூட பார்க்காமல் வெங்கடாசலத்திடம் இருந்து மா.செ. பதவியை பறித்திருக்கிறார் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரம்.
3o28ae