எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த சாம்சங் தொழிலாளர்கள், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டு போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று பணிக்குத் திரும்பினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்களில் 1000க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9.9.2024 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் இந்த போராட்டக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பின்னர் 15.10.2024 அன்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
தொழில் அமைதிம் பொது அமைதி காக்கும் பொருட்டு தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு செல்ல வேண்டும் என்று அக்கூட்டத்தில் முடிவானது. இதையடுத்து சாம்சங் தொழிலாளர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாம்சங் நிறுவனத்தின் சிஐடியு தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனையில் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அனைவரும் பணிக்கு திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் சிஐடியு அமைப்பின் தலைவர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலச் செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்று பணிக்கு திரும்பி இருக்கிறார்கள் தொழிலாளர்கள்.
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு செல்லும்போது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்க கூடாது. அதே நேரம் மீண்டும் பணிக்கு திரும்பும் தொழிலாளர்களு நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அக்கூட்டத்தில் உறுதி பேசி ஒப்பந்தம் ஆனதை அடுத்து அன்றைய தினமே போராட்டத்தை வாபஸ் பெற்றாலும் இன்று 17.10.2024 போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.