பேரணியாகச் சென்று காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலத்தை முற்றுகையிட முயன்ற சாம்சங் ஊழியர்கள் கைதாகினர்.
சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் கார் உற்பத்தி தொழிற்சாலை யில் சுமார் 1,700 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இந்த தொழிலாளர்கள் ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ துவங்கி உள்ளார்கள். இந்த சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், ஊதியத்தை உயர்த்த தர வேண்டும் என்றும், போனஸ் தர வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1500 தொழிலார்கள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் 200 தொழிலாளர்களை மட்டுமே கொண்டு ஆலை இயங்கி வருகிறது. இதனால் கடந்த 9ம் தேதி முதல் ஆலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழிற்சங்க மையத்தின் காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார், தொழிலாளர் துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட இந்த பிரச்சனை முடிந்தபாடில்லை.
தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையிலும் போராட்டம் தொடரும் என்று ஊழியர்கள் உறுதியாக உள்ளனர்.
போராட்டத்தின் அடுத்த வடிவமாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்று முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த சனிக்கிழமை அன்று ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி, பொன்னேரி , செவிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பேரணியாகச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
கைதான 100க்கும் மேற்பட்ட ஊழியர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் போலீசார்.