ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருபத்து ஐந்து நாட்களுக்கு மேலாக சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த தொழிலாளர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிஐடியு தொழிற்சங்கத்தினர் இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.
சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதற்காக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், சிறு -குறு – நடுத்தர தொழில்துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் அடங்கிய குழுவை நியமித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதையடுத்து முதற்கட்டமாக சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார் அமைச்சர் டிஆர்பி ராஜா. இதனைத்தொடர்ந்து இன்று தொழிற்சங்க நிர்வாகிகள், சாம்சங் ஆலை நிர்வாகத்தினர் இன்று 6ஆவது கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இது தோல்வியில் முடிந்ததால் 7ஆவது கட்ட பேச்சுவார்த்தை வரும் 17ம் தேதி அன்று நடைபெறும் என்று முடிவு செய்துள்ளனர்.
அதன் பின்னர் சிஐடியும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா, அன்பரசன், கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சாம்சங் ஆலை தொழிலாளர்களும் பங்கேற்றனர். இந்த பேச்சு வார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து ஏற்க தயார் என்கிறது சாம்சங் ஆலை நிர்வாகம். ஆனால், சிஐடியு ஆதரவுடன் தொடங்கப்பட்டிருக்கும் சாம்சங் இந்தியா தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் அளிக்க முடியாது என்கிறது சாம்சங் நிர்வாகம். ஆனால், போராடும் தொழிலாளர்களோ சங்கத்திற்கு அங்கீகாரம் வேண்டும் என்கிறது . இதனால்தான் பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டாமல் போகிறது என்ற விமர்சனம் இருக்கிறது.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்திரராஜன், ‘’சாம்சங் வேலை நிறுத்தம் போராட்டம் குறித்து இரு தரப்பிடமும் பேசி சுமூக முடிவை எட்டவேண்டும் என்று அமைச்சர்கள் குழுவிடம் முதல்வர் அறிவுறுத்தி இருக்கிறார்.
அந்த அடிப்படையில் அமைச்சர்கள் குழு இன்று எங்களோடு பேசினார்கள். அப்போது எங்களுடைய கருத்துக்களை முழுமையாக சொல்லி இருக்கிறோம். 16 ஆண்டுகளாக சங்கம் வைக்காத நாங்கள் ஏன் சங்கம் வைத்தோம்? எப்படி சங்கம் வைக்க கட்டாயப்படுத்தப்பட்டோம்? என்று தொழிலாளர்கள் அவர்களின் குறைகளை நிதானமாகச் சொன்னார்கள். அமைச்சர்களும் பொறுமையாக அனைத்தையும் கேட்டுக்கொண்டார்கள். இந்த பிரச்சனையை ஒரு தீர்வுக்கு கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள் அமைச்சர்கள். நிச்சயமாக கொண்டு வரலாம். எங்களுக்கும் அதுதான் விருப்பம்.
சங்கம் தொடர்பாக சாம்சங் நிர்வாகத்துடன் பேசி ஒரு முடிவை சொல்லுங்கள் என்று அமைச்சர்களிடம் வலியுறுத்தி இருக்கிறோம். நிர்வாகத்துடன் அமைச்சர்கள் பேசுவதாக சொல்லி இருக்கிறார்கள். நிர்வாகத்தின் கருத்தை கேட்டு எங்களிடம் அதைச் சொல்வார்கள். அடுத்துதான் என்ன நடக்கும் என்று தெரியவரும்.
மற்றபடி இன்று நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை’’ என்றார்.
நாளை முடிவு தெரியும்:
இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர், ‘’சாம்சங் தொழிலாளர்கள் விவகாரத்தில் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் நாளை முடிவு தெரியும்’’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் அமைச்சர் தா.மோ. அன்பரசன்.