23ஆவது நாளாக சாம்சங் ஆலை தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் உண்மைக்குப் புறம்பாக ஆலை நிர்வாகம் மீது பொய்யான காரணங்களைச்சொல்லி தொழிற்சங்கம்தான் தங்களை மிரட்டி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தி வருகிறது என்று ஊழியர்கள் குற்றம்சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இயங்கிவரும் சாம்சங் ஆலையில் சுமார் 1700 தொழிலாளர்கள் வேலை செய்துவருகின்றனர். இவர்கள் தொடங்கிய ‘சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’-ஐ அங்கீகரிக்க வேண்டும் என்றும், ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும், போனஸ் தரவேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 9ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறைந்த தொழிலாளர்களுடன் ஆலை இயங்கி வருகிறது.
போராட்டத்தை கைவிடக்கோரி 5 முறை நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.
தொடர் போராட்டத்திற்கு காரணம் என்ன?
’’சாம்சங் ஆலையிடம் பேசி அடுத்த மூன்று வருடங்களில் சம்பளத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தர ஏற்பாடு செய்து தரப்படும். ஒரு கோடி ரூபாய் வரையிலும் ஒவ்வொருத்தருக்கும் ஊதிய நிலுவைத்தொகை பெற்றுத்தரப்படும். அரசு நிர்ணயித்த நிலையான வேலை நேரத்தை விட குறைவாக, அதாவது உணவு இடைவேளையுடன் 8 மணி நேர பணிக்கு ஏற்பாடு செய்யப்படும். வேலைநாட்கள் 6 நாட்களிலிருந்து 5 நாட்களாக குறைத்து தரப்படும்’’ என்று ஆசை வார்த்தைகளை அள்ளிக் கொடுத்து சாம்சங் ஆலை ஊழியர்களை தொடர் போராட்டத்தில் ஈடுபட வைக்கிறது தொழிற்சங்கம், தொழிற்சங்கத்தின் ஆசைவலையில் சிக்கி தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மை என்ன?
ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களின் சராசரி வருமானம் 14 ஆயிரம் ரூபாய் என்றும், 12 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்தும் சம்பளம் உயர்த்தி தரப்படவில்லை என்றும், விடுமுறை அளிப்பதே இல்லை என்றும், இதர சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் தொழிலாளர்களின் தரப்பில் உள்ள குறைகள் இவை என்றும் தொழிற்சங்கம் முன்வைத்திருக்கிறது.
ஆனால், சாம்சங் ஆலையில் பணிபுரியும் ஊழியர்களின் சராசரி வருமானம் 29,530 என்றும் 15 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களின் அதிகபட்ச சம்பளம் 64,056 என்றும், போனஸ் , கருணைத்தொகை, ஊக்கத்தொகை, தொழிலாளர் வைப்பு நிதி உள்ளிட்ட சலுகைகளையும் ஆலை நிர்வாகம் வழங்குகிறது என்று ஆலை நிர்வாகம் ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
ஆலையில் 10 வருடத்திற்கு மேலான அனுபவமுள்ள 900 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களின் சராசரி சம்பளம் 39,100 ரூபாய் என்கிறது ஆலை நிர்வாகம்.
மேலும், ஆண்டு விடுமுறை, மருத்துவ விடுமுறை, சாதாரண விடுமுறை என்று ஒரு தொழிலாளி வருடத்திற்கு குறைந்த பட்சம் 22 நாட்களும், அதிகபட்சம் 148 நாட்களும் எடுத்துள்ளனர் என்கிறது ஆலை நிர்வாகம்.
தென்னரசு எனும் ஊழியர் மிகவும் ஒழுங்கற்ற முறையில் பணிபுரிந்துள்ளார். ஆனால் ஆண்டுக்கு அதிக விடுமுறைகளை எடுத்துள்ளார். உற்பத்தி வரிசையில் பார்த்தால் கூட, இந்த ஊழியர் தனது வேலையில் மிகவும் திறமையற்றவராக இருந்தார். இதனால் உற்பத்தியில் தாமதம் மற்றும் தயாரிப்பு தரத்தில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அவருக்கு பல எச்சரிக்கைகள் விடுத்த போதிலும், அவர் தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. இந்த ஊழியர் தனிப்பட்ட வணிகத்தையும் நடத்தி வருவதாகவும், இரட்டை வருமானம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. எங்களிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றாலும் கூட, நம்பும்படியாக சிலர் சொல்கின்றனர்.
கடந்த 9 ஆண்டுகளில் 7 ஆண்டுகளில் அவரது மதிப்பீடு 4 அல்லது 5 ஆக இருந்தது. (மதிப்பீட்டு மதிப்பீடுகளில் மிகக் குறைவு); மற்ற 2 ஆண்டுகளில் அது 3 மட்டுமே.
ஆனாலும் அவரை நிறுவனத்தில் இருந்து நீக்காமல் எங்கள் நிர்வாகம் மிகவும் பெருந்தன்மையுடன் இருக்கிறது என்றும் கூறுகிறது ஆலை நிர்வாகம்..
உண்மை நிலை இவ்வாறு இருக்க, தொழிலாளர்கள் பொய்யான காரணங்களைச் சொல்லி போராட தூண்டப்படுகிறார்கள் என்று ஆலை நிர்வாகம் சொல்வதன் மூலம் தெரிகிறது.
சாம்சங் ஊழியர்களுக்கு மிரட்டல்! அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!
சாம்சங் ஆலை ஊழியர்கள் போராட்டத்தில் பல ஊழியர்கள் பங்கேற்கவில்லை. தொழிற்சங்கம் நடத்தும் இந்த போராட்டத்தில் பங்கேற்காத , தொழிற் சங்கத்தினரை ஆதரிக்காத தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் சேர ரூ.2 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டும். வேலை நிறுத்தத்தின் போது தொழிற்சங்க போராட்டத்தில் சேராததற்கு இதுதான் அவர்களுக்கு தண்டனை என்று தொழிற்சங்கம் மிரட்டுவதாக சாம்சங் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், போராட்டத்தினால் சங்கத்திற்கு அங்கீகாரம் கிடைத்த பின்னர் குறிப்பிட்ட தொழிற்சங்க பிரமுகருக்கு சாம்சங் ஊழியர்கள் ஒரு பெரிய கார் வாங்கத் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.
அரசு அதிகாரிகள், அமைச்சரிடம் பேசி வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று சாம்சங் ஆலை உறுதியளித்த பிறகு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மற்றும் சாம்சங் நிர்வாகத்துடன் பேச அரசாங்கம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. ஆனாலும் தொழிற்சங்கம் கூட்டத்தை புறக்கணித்து, தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வலியுறுத்தியது.
சாம்சங் நிர்வாகம் அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக ஊழியர்களை தொழிற்சங்கம் தவறாக வழிநடத்தியது என்று தொழிற்சங்கம் மீது ஊழியர்கள் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத மற்ற ஊழியர்கள் வேலைக்குச் செல்வதை தொழிற்சங்கம் மிரட்டுகிறது. 300 பணியாளர்களுக்கு மேல் போராட்டம் நடைபெறும் இடத்தில் இருப்பதில்லை. ஏறத்தாழ 900 ஊழியர்கள் வேலைக்குச் செல்லவோ அல்லது போராட்ட இடத்திற்குச் செல்லவோ இல்லை. இந்த தொழிலாளர்கள் தொழிற்சங்க நபர்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள் என்றும்,
ஊழியர்கள் தவறு செய்யும் போது விசாரணைக்கு அழைக்கப்பட்டு தனியறையில் சித்ரவதை செய்யப்பட்டனர் என தொழிற்சங்கம் குற்றம்சாட்டியது. ஆனால், அரசு அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்ட வீடியோவில் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்பது உறுதியானது என்றும்,
உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கும் கொள்கையை சாம்சங் நிறுவனம் ஏற்கனவே கொண்டுள்ளது என்பதை மறைத்து, உயிரிழந்த ஊழியர் குடும்பத்திற்கு சாம்சங் நிறுவனம் வழங்கிய இழப்பீட்டை அவர்களின் வெற்றியாகக் காட்டி ஊழியர்களை தொழிற்சங்கம் தவறாக வழிநடத்தியது என்றும்,
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்கள் சாம்சங் நிறுவனத்தை விட்டு வெளியேறினால், சுமார் ரூ.50 லட்சத்தை தீர்வாகப் பெறுவார்கள் என்று தொழிற்சங்கம் உறுதியளித்துள்ளது. இதனால் பல ஊழியர்கள் ரூ.50 லட்சம் இழப்பீடு பெற ஆர்வமாக இருக்கிறார்கள். இந்த காரணத்திற்காக மட்டுமே சாம்சங்கை விட்டு வெளியேற நினைக்கின்றனர் என்றும் ஊழியர்கள் தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
தொழிற்சங்கம் மீது சாம்சங் ஆலை ஊழியர்கள் வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் இப்படி அதிரவைக்கின்றன.
அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தைக்கு தயார்!
இந்த வேலை நிறுத்தப்போராட்டம் குறித்து சாம்சங் ஆலை தரப்பு வழக்கறிஞர் ஆனந்த கோபாலன் அளித்துள்ள பேட்டி சமாதானக்கொடியினையே ஏந்தி நிற்கிறது. ’’ஊழியர்களின் இந்த வேலைநிறுத்தம் சட்ட விரோதமானது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கம் அரசால் பதிவு செய்யப்படவில்லை. அவர்களின் கோரிக்கை தற்போது வரை பரிசீலனையில் உள்ளது. அப்படி இருக்கும் பொழுது வேலைநிறுத்தம் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல’’ என்கிறார்.
அவர் மேலும், ‘’நீதிமன்ற உத்தரவின்படி ஆலைக்கு 500 மீட்டர் தள்ளியே வேலைநிறுத்தம் நடப்பட வேண்டும். ஆனால் போராட்டக்காரர்கள் இந்த விதிகளை பின்பற்றவில்லை’’ போராடும் ஊழியர்கள் மீது குற்றம்சாட்டினாலும்,
’’அரசால் நிர்ணயம் செய்யப்பட்டதை விட அதிகமான சம்பளம் சாம்சங் நிறுவனம் கொடுத்தும் கூட அவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் எந்தவொரு தொழிலாளர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை, வேலைக்கு திரும்பிவரும் தொழிலாளர் மீதும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என சாம்சங் நிறுவனம் உத்தரவாதம் அளித்துள்ளது.
தொழிலாளர்களுடன் பேசி கோரிக்கைகளை சரிசெய்ய சாம்சங் நிறுவனம் தயாராக உள்ளது. நேரடியாகவும், அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த சாம்சங் நிறுவனம் தயாராக உள்ளது’’ என்று சமாதானக் கொடியினையே ஏந்துகிறார்.