38 நாட்கள் கழித்துப் பணிக்குத் திரும்பியிருக்கிறார்கள் சுங்குவார்சத்திரம் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள். தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை சாம்சங் நிறுவனம் ஏற்றுக்கொண்டதால் நிறுவனம் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.வுடன் அமைப்பான சாம்சங் இந்தியத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுத்து கவனத்தை ஈர்த்தனர். தொழிலாளர்களின் ஊதிய உயர்வு மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட கோரிக்கைகளில் சாம்சங் நிறுவனத்திற்கும் சங்கத்திற்கும் முரண்பாடு நீடித்ததால் வேலைநிறுத்தம் தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள், நிறுவனத்திடமும் தொழிலாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வராத நிலையில், காவல்துறை மூலம் போராட்டம் முடக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்தன. போலீசார் மீது தாக்குதல், இரவு நேரக் கைது, போராட்டக் களத்தில் இருந்த பந்தல் பிரிப்பு இவை ஆளுங்கட்சிக் கூட்டணிக்குள் தி.மு.க.-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மோதலாக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டன. உலகப் பொருளாதாரம், தொழிலாளர் உரிமை உள்ளிட்டவை குறித்து நீயா-நானா என இருதரப்புக்கும் மல்லுக்கட்டி நின்றன. எனினும், போராட்டக் களத்தில் எந்த மாற்றமும் ஏற்படாத நிலை நீடித்தது.
மாநில நிதியமைச்சர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், சங்கத்தை அங்கீகரிக்க தமிழ்நாடு அரசு உடன்பாடாக இருக்கிறது என்பதையும், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அரசு முனைப்பாக இருப்பதையும் தெரிவித்தார். முதலமைச்சரும் இந்தப் பிரச்சினையை சுமூகமாகத் தீர்ப்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை அமைச்சர் எடுத்துரைத்தபோதும், தொழிற்சங்க நிர்வாகத்தினர் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் சாம்சங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் போல விமர்சித்தனர். இது இருதரப்பிலும் குறி வைத்து கல் எறியும் சூழலை உருவாக்கிய நிலையில், தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்தப் பிரச்சினையின் தன்மையை விளக்கி அறிக்கை வெளியிட, அதன் மீதும் கற்கள் பறந்து வந்து விழுந்தன. விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், இணக்கமான முடிவு காண்பதில் முதலமைச்சர் அக்கறை செலுத்தினார்.
அதன்காரணமாக, சாம்சங் நிறுவனம், சி.ஐ.டி.யூ தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அக்டோபர் 15 அன்று மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகத் தீர்வு ஏற்பட்டது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளின் மீது சாம்சங் நிர்வாகம் எழுத்துப்பூர்வமான பதிலுரையை சமரச அலுவலர் முன் தாக்கல் செய்யவேண்டும், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காரணத்திற்காக தொழிலாளர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது, பணிக்குத் திரும்பும் தொழிலாளர்கள் நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்பன உள்ளிட்ட அம்சங்கள் சுமூக உடன்பாட்டில் இடம்பெற்றிருந்த நிலையில், இதனை நிர்வாகமும் தொழிற்சங்கமும் ஏற்றுக்கொண்டன.
முத்தரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.ஐ.டி.யூ.வின் மாநிலத் தலைவர் அளித்த பேட்டியில், “எதையும் ஒத்துககொள்ள மாட்டோம் எனக் கூறிய நிர்வாகம், அமைச்சர்களின் அழுத்தத்தால் தற்போது பேச முன்வந்துள்ளது” என்று கூறி, அரசின் நடவடிக்கைக்குப் பாராட்டுகள் தெரிவித்தார். தொழிற்சங்க அங்கீகாரம் சட்டப்பூர்வமாக நடைபெறும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்துள்ளனர்.
அக்டோபர் 16 அன்று தொழிலாளர்களுடன் சங்கத்தினர் நடத்திய ஆலோசனையில், அரசு மூலமாக நிர்வாகத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில், பணிக்குத் திரும்புவதென்றும், நிர்வாகம் ஒப்புக்கொண்டவற்றை செயல்படுத்தாவிட்டால், முஷ்டியை உயர்த்திப் போராடுவோம் என்றும் தீர்மானிக்கப்பட்டு, 17ந் தேதியன்று சாம்சங் தொழிலாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர். உடன்பாடு செயல்பாடு குறித்து ஆராய்வதற்கு நவம்பர் 7ஆம் நாள் அரசு-சாம்சங்-தொழிற்சங்கம் என முத்தரப்பு கூட்டம் நடைபெற உள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவது தொழிலாளர் உரிமை. அதற்குப் பேச்சுவார்த்தை மூலம் இருதரப்பு நலன்களுடன் தீர்வு காண வேண்டும். அக்டோபர் 7ஆம் நாள் Spark Media வெளியிட்ட தலையங்கத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகள்தான் இன்று உலக நாடுகளின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகப் பார்க்கப்படுகின்றன. உடலுழைப்புத் தொழிலாளர்களுடன் அறிவுசார் தொழில்களில் ஈடுபடும் ஊழியர்களும் அதிகமாகியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் நாடான சீனாவிலேயே பொருளாதாரக் கொள்கைகள் மாற்றம் பெற்றுள்ள நிலையில், முதலாளிக்கும் தொழிலாளர்களுக்குமான Win:Win situation எனப்படும் இருதரப்புக்குமான பயன்களே வெற்றிகரமானத் தீர்வாகப் பார்க்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. சாம்சங் நிறுவன விவகாரத்தில் அதுதான் நடந்துள்ளது.