சனாதானம் பேசக்கூடியவர்கள் எல்லாவற்றுக்கும் காவி சாயம் பூசிக் கொண்டிருக்கும் வேளையில் வள்ளலாரின் 201ஆம் ஆண்டு பிறந்தநாளாக இன்றைய (அக்டோபர் 5) நாள் அமைந்திருப்பது வாய்ப்பாக அமைந்துள்ளது. வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெருங்கருணை நாள் என்று கொண்டாடுகிறது தமிழ்நாடு அரசு.
சனாதனம் என்பது பழமையானது- மாற்ற முடியாதது-நிலையானது என்ற அர்த்தம் கொண்ட சொல்லாகும். அதாவது, ஒவ்வொரு மனிதனின் தலையெழுத்தும் அவனது பிறப்பினால் தீர்மானிக்கப்படுகிறது என்கிற வருணாசிரமக் கொள்கைதான் சனாதனத்தின் அடிப்படை. நீ எந்த சாதியில் பிறக்கிறாயோ அதற்கென விதிக்கப்பட்ட வேலையை செய்யவேண்டியதுதான் உன் பிறப்பின் கடமை என்பது வருணாசிரமம். பாவ யோனியில் பிறந்தவர்களாக மனிதகுலத்தின் ஒரு பகுதியினரை சித்தரிப்பதும் இந்த சனாதனம்தான். நான்கு வருணங்கள், குலம், கோத்திரம், ஆச்சாரங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் இவையெல்லாம் நிலையாக நீடித்திருக்க வேண்டும் என்பதே சனாதன தர்மம். அதற்கு நாங்கள் மயங்க மாட்டோம். அதை ஏற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இல்லை என்று கலகம் செய்தவர் வள்ளலார்.
மனித சமுதாயத்தில் எந்த ஒரு பழக்க வழக்கமும் அப்படியே நிலைத்திருக்க முடியாது. காலத்தின் புதுமைகேற்ப மாறிக்கொண்டேதான் இருக்கும். சனாதன வைதீக மதத்தின் இறுக்கமான கொடூரப் பிடியிலிருந்து மக்களை மீட்கும் அருட்பெருஞ்சோதியாக- ஆன்மீகக் கலகக்காரராக செயல்பட்டவர் வள்ளலார்.
‘நால்வருணம், ஆசிரம், ஆசாரம் முதலான நவின்ற கதை சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே’ என்று வள்ளலார் பாடியுள்ளார். அதாவது, இன்றைய கிண்டி கிறுக்கரும், ஆந்திரா பித்துக்குளியும்போல அன்றைக்கு சிறுபிள்ளைத்தனமாக விளையாடியவர்களை நோக்கி கணை எறிகிறார் வள்ளலார். ‘மதித்த சமய-மத வழக்கமெல்லாம் மாய்ந்தது. வருணாசிரமம் என்னும் மயக்கமும் மாய்ந்தது’ என்கிறார்.
வள்ளலார் எழுதிய திருவருட்பாவின் ஆறாம் தொகுதியில் சனாதனத்தை சல்லி சல்லியாக்கியிருக்கிறார்.
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே” என்று பாடியுள்ளார்.
சமஸ்கிருத வேதங்களுக்கு மாற்றாக திருக்குறள் வகுப்பு எடுத்தவர் வள்ளலார். ஆரியப் பண்பாட்டு அடிப்படையிலான சடங்கு சம்பிரதாயங்களைப் புறக்கணித்து, அதற்கு மாற்றாக ஒளி வழிபாட்டை நெறிப்படுத்தினார். பசிப் பிணி போக்கும் மனிதநேயக் கொள்கை கொண்ட சன்மார்க்க கருத்துகளை முன்வைத்தார். அந்த சன்மார்க்க கருத்துகள் வளர்ச்சி பெற்று சமூக நீதியாக, சமுதாயத்திலும் அரசியல் களத்திலும் வளர்ந்தது. எல்லாருக்கும் எல்லாம் என்பதை முன்வைத்தது.
சனாதனம் மனிதர்களைப் பிறப்பால் பிரித்துப் பார்க்கிறது. சமூக நீதி எல்லா மனிதர்களும் பிறப்பால் சமம் என்கிறது. சனாதனம் நீ உன் பாட்டன், முப்பாட்டன் செய்த தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்கிறது. சமூக நீதி நீ படித்து முன்னேறி உன் திறமைக்குரிய எந்தத் தொழிலையும் செய்ய வாய்ப்பளிக்கிறது. சனாதனம் கோயிலுக்குள்கூட சாதி பார்த்து அனுமதிக்கிறது. சமூக நீதி ஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் என்று அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குகிறது. சனாதனம் தமிழ்மொழியை நீஷபாஷை என்று தள்ளி வைக்கிறது. சமூகநீதி கருவறைக்குள் தமிழ் அர்ச்சனை செய்ய வழிசெய்கிறது. சனாதனம் பெண்களை அடிமைப்படுத்தி அடுப்பங்கரைக்குள் முடக்குகிறது. சமூகநீதி பெண்களைப் படிக்க வைத்து முன்னேற்றுகிறது. சனாதனம் தொட்டால் தீட்டு-பார்த்தால் பாவம் என்று தீண்டாமையை வலியுறுத்துகிறது. சமூக நீதி தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களை சட்டரீதியாகத் தண்டிக்கிறது. ‘மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்ற வள்ளலார் நெறியின் வளர்ச்சி இது.
வள்ளலார் முஸ்லிமல்ல, கிறித்துவரல்ல, பௌத்தரல்ல, ஜெயினரல்ல.. இன்றைய கணக்கில் அவரும் இந்துதான். காவிகளைக் கதறவிட்ட வெள்ளை உடை இந்து.
சன்மார்க்கம் என்கிற வள்ளலாரின் கொள்கையும் அவரைப் போன்ற சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளாலும்தான் சனாதனத்தின் பிடியிலிருந்து இந்திய மக்கள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். இடையிடையே சனாதானம் பேசக்கூடியவர்கள் ஸ்பீடு பிரேக்கர் போல வந்துகொண்டுதான் இருப்பார்கள். அவற்றைக் கடந்து முன்னேறும் கொள்கை வலிமை சன்மார்க்கம்-சமூக நீதிக்கு உண்டு. Lets wait and see.