மகாராஜாக்கள் காலத்து விழா போல நடந்த குடும்பத்தின் திருமணத்தில் இந்தியாவின் ஆளுங்கட்சி, மற்ற கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள், பிரபல கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். கட்சி வேறுபாடின்றி திருமணம், இறப்பு போன்ற குடும்ப நிகழ்வுகளில் கலந்துகொள்வது வடமாநிலங்களில் இயல்பானது. நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்த சில நிமிடங்கள் கழித்து, படத்திறப்பு விழா போன்றவற்றில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் புன்னகையுடன் கலந்துகெள்ளும். மறுநாள், நாடாளுமன்றத்தில் மறுபடியும் இரு தரப்புக்கும் அனல் பறக்கும் வாதங்கள் தொடரும்.
தமிழ்நாட்டில் இத்தகைய அரசியல் பண்பு மிகுதியாக இருந்த காலம் ஒன்று உண்டு. கொள்கைகளில் எதிரெதிர் துருவங்களாக இருந்த பெரியாரும் ராஜாஜியும் தனிப்பட்ட நட்பில் இணைந்தே இருந்தனர். ராஜாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், அவர் இறந்தபோதும் பெரியார் நேரில் சென்று கலங்கினார். கலைஞர் கருணாநிதி அமைச்சராக இருந்தபோது அவரது தாயார் அஞ்சுகம் அம்மாள் இறந்தபோது, அவருக்கு முன்பாக அவரது வீட்டுக்குச் சென்றவர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் இறந்தபோது, முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அனைத்துப் பணிகளையும் முன்னின்று கவனித்தார்.
இத்தகையப் பண்பு நிறைந்த தமிழ்நாட்டு அரசியல் பின்பு தி.மு.க.-அ.தி.மு.க. பங்ககாளிச் சண்டையில் மாறிப்போனது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். இறந்தபோது, அவருக்கு இறுதி மரியாதை செய்யச் சென்ற 40 ஆண்டுகால நண்பரான தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதியால் மலர் வளையம் வைக்க முடியாத சூழலை அரசியல் உருவாக்கியிருந்தது செல்வி.ஜெயலலிதா செல்வாக்குடன் அரசியல் செய்த காலத்தில், காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும், அ.தி.மு.க.வில் இருந்த அவரது அம்மா சுலோச்சனா சம்பத்துக்கும் அறிக்கைப் போர் நடந்தது. எம்.ஜி.ஆர். ஆட்சியில் செல்வாக்கான அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்த திருவில்லிபுத்தூர் தாமரைக்கனி, கடைசி காலத்தில் தி.மு.க.வில் இருந்தார். அப்போது அவரது மகன் இன்பத்தமிழன் அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தார். தாமரைக்கனி இறந்தபோது, அப்பாவின் மரணத்திற்கு சென்று மகனாகத் தன் கடமைகளைச் செய்தால் ‘அம்மா’ கோபித்துக்கொண்டு பதவியைப் பறித்துவிடுவார் என்பதால் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்கும் வரையில் அவர் போகவேயில்லை.
இப்படியான அரசியல் ஒரு கால் நூற்றாண்டு காலம் நிலவிய நிலையில்தான், செல்வி.ஜெயலலிதா உடல்நலன் குன்றி சிகிச்சை பெற்றபோதும் அவர் மரணத்தின்போதும் இன்றைய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வந்தார். அவர் மீட்டெடுத்த பண்பு, கலைஞர் கருணாநிதி மரணத்தின்போதும் அ.தி.மு.க. தலைமையால் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆட்சிக்கு வந்த பிறகும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பண்பைக் கடைப்பிடிப்பதால், ‘நாகரிக அரசியல்’ என்று ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வெளிப்படுகின்றன. ஒரு சில நிகழ்வுகளில் விலகியிருப்பதே அரசியல் கோணத்தில் சரியானப் பார்வையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் ஒரு திருமண நிகழ்வில் தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மற்ற கட்சிகள் எனப் பல தரப்பைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டது ஆச்சரியத்தைத் தந்துள்ளது. தமிழ்நாட்டின் அந்த அம்பானி யார்?
மணல் காண்ட்ராக்டர் ராமச்சந்திரன். சிவங்கை மாவட்டத்தில் நடந்த அவரது குடும்பத் திருமணத்தில் தி.மு.க.வின் சீனியர்-ஜூனியர் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்ச்ர ஓ.பன்னீர்செல்வம், காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்கள், வி.சி.க தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க.வின் டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட மேலும் பலரும் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத் தேர்தலில் மணல் காண்ட்ராக்டர் ஒருவரின் சகோதரர் ஒரு கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். மற்ற கட்சிகளுக்கு மணல் விற்பனைப் பணம் நிதியாகக் கிடைத்திருக்கும்.
மணல் காண்ட்ராக்ட் மற்றும் மணல் அள்ளுவது தொடர்பாக நேற்றைய ஆளுங்கட்சி மீது அன்றைய எதிர்க்கட்சியும், இன்றைய ஆளுங்கட்சி மீது தற்போதைய எதிர்க்கட்சியும் மற்ற கட்சிகளும் மாறி மாறி குற்றம்சாட்டினாலும், அதற்கு காரணமானவரின் குடும்ப விழாவில் எல்லாரும் ஒன்று சேர்ந்து, பந்தியில் கை நனைத்திருக்கிறார்கள். இதனை நாகரிக அரசியல் என்று எளிதாகக் கடந்து விட முடியாது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆளுங்கட்சியாக யார் இருந்தாலும், அவர்களை ஆள்வது மணல் கோட்டை ராஜ்ஜியம்தானா என்பது தமிழ்நாட்டு மக்களின் நியாயமான சந்தேகம். நேர்மையான விடை தரப் போகிறவர் யார்?