ஈரோடு கிழக்கு தொகுதியில் ‘இந்தியா’ கூட்டணிதான் வெற்றி பெறும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். ஆனால், மீண்டும் அங்கே கூட்டணியில் உள்ள காங்கிரஸ்தான் போட்டியிடுகிறதா? இல்லை, திமுக போட்டியிடுகிறதா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
திமுகவா? காங்கிரசா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.
2021இல் சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா. போட்டியிட்டு வென்றார். 2023இல் அவரின் திடீர் மறைவுக்கு பின்னர் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார்.
தற்போது இளங்கோவனின் மறைவுக்கு பின்னர் அங்கே அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று ஈரோடு மாநகர காங்கிரஸ் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
ஆனால் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு எழுந்திருக்கிறது. 35 பேர் கலந்துகொண்ட கூட்டத்தில்தான் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள். கட்சியின் பிற நிர்வாகிகள் யாரும் இந்த தீர்மானத்தை ஏற்கவில்லை என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது. துபாயில் தொழில் செய்து வரும் சஞ்சய் சம்பத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி இருக்கும்போது அவரை எப்படி வேட்பாளராக ஏற்க முடியும்? என்று பலரும் கொந்தளிக்கின்றனர்.
ஒரு தலைபட்சமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஒட்டு மொத்த நிர்வாகிகளும் ஒரு மனதாக எடுத்து முடிவுதான் இது என்கிறார் ஈரோடு மாநகர காங்கிரஸ் கட்சி தலைவர் திருச்செல்வம்.
அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நபராக உள்ளார் சஞ்சய் சம்பத். தொண்டர்களும் அவரே போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்கிறார் திருச்செல்வம்.
எப்படியும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரசுக்குத்தான் ஒதுக்கப்படும் என்று முடிவெடுத்துதான் இந்த மோதல் எழுந்திருக்கிறது.