
கடந்த 19ம் தேதி அன்று, ‘’இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால்.. அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்.’’ என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, கூடவே பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தினையும் பகிர்ந்திருந்தார் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்.
இந்த விவகாரம் காட்டுத்தீயாக பரவியது.
பிரபாகரனுடன் சீமான் போட்டோ எடுக்கவில்லை என்று வைகோ உள்ளிட்டவர்கள் 15 ஆண்டுகளாக சொல்லி வந்த நிலையில் சங்ககிரி ராஜ்குமாரின் இந்தப்பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்த கேள்விக்கு, ‘’அது எடிட் செய்த போட்டோ என்பதற்கு ஆதாரம் காட்டச்சொல்லுங்க’’ என்றார் சீமான்.

அதற்கு, ‘’அதுவே ஒரு ஆதாரம் என்று காட்டுகிறோம். அதுக்கு ஒரு ஆதாரம் கேட்கிறாரே’’ என்று பதிலடி கொடுத்தார் சங்ககிரி ராஜ்குமார். மேலும், பெரியார் குறித்து தான் பேசியபோது போனை சீமான் கட் செய்துவிட்டதாக சொன்னார் ராஜ்குமார்.
இதன் பின்னர் தனக்கு நாம் தமிழர் கட்சியினர் மிரட்டல் விடுத்து வருகின்றனர் என்று சொல்லும் ராஜ்குமார், அந்த மிரட்டல் விடுத்த எண்களை வெளியிட்டு, நாம் தமிழர்களுக்கு பதிலடியும் கொடுத்திருக்கிறார்.
’’அண்ணனின் தம்பிகளுக்கு வணக்கம்.
கடந்த நான்கு ஐந்து நாட்களாக என் அலைபேசிக்கு நேரடியாகவும் வாட்ஸ் அப் மூலமாகவும் தொடர்ந்து அழைத்துக் கொண்டே இருக்கிறீர்கள். அழைப்பை எடுத்தால் வீட்டில் இருக்கும் பெண்களை வசை பாடுகிறீர்கள் அல்லது மிரட்டுகிறீர்கள். அதற்காக அச்சப்பட்டு கொண்டு இந்த பதிவை எழுதவில்லை.
கசப்பை சுவைத்த உங்கள் நாவிற்கு இந்த ஆபாச வார்த்தைகள் தான் ஆறுதல் தரும் என்றால் பேசிவிட்டு போங்கள். இடையிடையே டேய்..சங்ககிரி ராஜ்குமார் நீ எந்த ஊர் காரன்டா என்று கேட்டு சிரிப்பும் மூட்டுகிறீர்கள்.

உங்கள் அச்சுறுத்தலுக்கோ.. ஆபாச வசவுகளுக்கோ நான் கவலைப்படவில்லை.
உங்களிடம் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். எனக்கு அழைப்பதற்கு முன்பாக உங்கள் முகப்பு படமாக வைத்திருக்கும் தலைவர் பிரபாகரன் படத்தை நீக்கிவிட்டாவது அழையுங்கள்.
வீரம் நிறைந்த அவர் புகைப்படத்தை கண்களில் பார்த்துக் கொண்டே, காதுகளில் உங்கள் அழுக்கு வார்த்தைகளை கேட்பதற்கு அருவருப்பாக இருக்கிறது.
உலகே கண்டு வியந்த ஒரு ஒப்பற்ற தலைவரை முடிந்த வரை இழிவு செய்து விட்டீர்கள். இனியேனும் விட்டு விடுங்கள்.
நன்றி.
சங்ககிரி ராச்குமார்.’’