
செய்திச் சேனல்களில் காலை நேர பிரேக்கிங் நியூஸாக இடம்பிடித்தது திரைப்பட நடிகை சரோஜாதேவியின் மரணம். தமிழ்த் திரையுலகில் 1960களில் கொடிக்கட்டிப் பறந்த நடிகையாக இருந்த சரோஜாதேவியின் பூர்வீகம் கர்நாடக மாநிலம் என்பதால் கன்னடத்துப் பைங்கிளி என்று திரையுலகினரால் அழைக்கப்பட்டவர். அபிநய சரஸ்வதி என்ற பட்டமும் அவருக்குரியது. அப்போது தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்றிருந்த நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் உள்ளிட்டோருடன் பல படங்களில் நடித்தவர் சரோஜாதேவி. அவற்றில் ஹிட் அடித்த படங்களின் லிஸ்ட் அதிகம்.
சரோஜாதேவியை அந்தக் காலத்து நயன்தாரா என்று ஒப்பிடலாம். காரணம், அன்றைய பத்திரிகைகளின் அட்டைப் படங்களில சரோஜாதேவி படம் அடிக்கடி இடம்பெறும். டால்கம் பவுடர் விளம்பரங்களில் தொடங்கி புடவைக் கடை விளம்பரங்கள் வரை அவருடைய படங்கள் இடம்பிடிக்கும். பொங்கல் திருநாளில் வாழ்த்துகள் அனுப்பும் வழக்கம் பரவலானபோது, தெய்வப்படங்கள், தலைவர்கள் படங்கள், இயற்கை காட்சிகள் இவற்றுடன் விற்பனையில் போட்டிப் போட்டு விற்றவை சரோஜாதேவி படங்களுடனான பொங்கல் வாழ்த்து அட்டைகள்.
தோற்றப் பொலிவு, காட்சிக்கேற்ற பாவனைகள், குறும்புத்தனம், குழந்தை மொழி என சரோஜாதேவியை அன்றைய ரசிகர்கள் ரசித்ததற்கு நிறைய காரணங்கள் இருந்தன. ஒரு காலத்தில் 18+ கதைகள் கொண்ட புத்தகங்களின் விற்பனையும் அவற்றைப் படிப்பதும் ரகசியமாக இருக்கும். அத்தகையப் புத்தகங்களுக்கு அப்போது ‘சரோஜாதேவி புத்தகம்’ என்ற ‘கோடு வேர்டு’ இருந்தது. சரோஜாதேவிக்கும் அந்தப் புத்தகங்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. அவருடைய நடிப்பும் அதுபோன்ற கதைத்தன்மை கொண்டதாக இருக்காது. பெண்கள் அதிகம் விரும்பிய குடும்பப் பாங்கான பாத்திரங்களைக் கொண்ட கதாநாயகியாக அந்தக் காலத்தில் இருந்தவர் சரோஜாதேவி. ஏறத்தாழ 17 ஆண்டுகள் திரையுலகில் நாயகியாக நிலைத்து நின்றார்.
இன்றைய தலைமுறைக்கு அவரை நினைவூட்டக்கூடியது ஆதவன் திரைப்படத்தில் வடிவேலு உள்ளிட்டவர்களுடன் அவர் நடித்ததும், ‘கோப்பால்…’ என்ற மீம்ஸ் வார்த்தையும்தான். திரையுலகின் தாக்கம் தலைமுறை கடந்தும் ஏதோ ஒரு வகையில் இருக்கும் என்பதுதான் இதன் வெளிப்பாடு. பழைய படங்களை இப்போதும் பார்க்க முடியும், பழைய பாடல் காட்சிகளை இப்போதும் காண முடியும் என்பதால் பழைய திரைப்படக் கலைஞர்களுக்கும் சமூகத்தில் ஒரு கௌரவம் கிடைக்கும். ரசிகர்கள் அடையாளம் கண்டுகொண்டு செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள்.
எம்.ஜி.ஆருடன் கருப்பு-வெள்ளை படங்கள் தொடங்கி, கலர்ப்படங்கள் வரை 26 படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜாதேவி. எம்.ஜி.ஆருடன் அவர் முதலில் ஜோடி சேர்ந்தது, நாடோடி மன்னன் என்ற படத்தில்தான், இதனை தயாரித்து இயக்கியவரும் எம்.ஜி.ஆர்.தான். கருப்பு-வெள்ளையில் படம் இருந்த நிலையில், படத்தின் இரண்டாவது நாயகியாக சரோஜாதேவி அறிமுகமாகும் காட்சியிலிருந்து கலர்ப்படமாக மாறும். தி.மு.க.விலிருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டதால் அ.தி.மு.க. என்ற கட்சியைத் தொடங்கினார். அதற்கு பிரச்சாரம் செய்ய சரோஜாதேவியை அழைத்தார் என்று அரசியல் வட்டாரத்திலும் திரையுலகிலும் சொல்லப்பட்டது.
திரைப்பட கதாநாயகி என்ற நிலையிலிருந்து திருமணமாகி இல்லற வாழ்விற்கு சென்றுவிட்ட சரோஜாதேவி, தனக்கு அரசியலில் ஆர்வமில்லாததை வெளிப்படையாக சொல்லிவிட்டதால், அ.தி.மு.க.வின் தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர் வரவில்லை. பின்னர் சில ஆண்டுகள் கழித்து, சரோஜாதேவியைவிட ஒரு படம் கூடுதலாக எம்.ஜி.ஆருடன் ஜோடி சேர்ந்து நடித்த ஜெயலலிதா, அ.தி.மு.க.வுக்கு வந்தார். எம்.ஜி.ஆருக்குப் பிறகு அந்தக் கட்சிக்கும் தலைமையேற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் ஆனார்.
எம்.ஜி.ஆரின் திரையுலக உச்சத்தின் சமகாலத்தில் அவருக்கு இணையானப் புகழுடனும், தனித்துவமான திறமையுடனும் இருந்தவர் சிவாஜி கணேசன். அவரும் ஒரு கட்டத்தில், தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக்கட்சியை நடத்தினார். அவரால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறமுடியவில்லை. அவருக்காகவும் சில நடிகைகள் பிரச்சாரம் செய்திருக்கின்றனர். சிலர் தவிர்த்திருக்கின்றனர்.
கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில், அவருடைய திரைத்துறை ஜோடியான ஸ்ரீப்ரியா முக்கிய பொறுப்பு வகித்ததுடன், தேர்தலிலும் போட்டியிட்டார். அரசியல் களம் அவருக்கு கசப்பான அனுபவத்தையே தந்தது. கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது நடிகை ராதிகா போட்டியிட்டுத் தோற்றுப் போனார்.
தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி தமிழ்நாட்டில் ஆட்சி செய்யக்கூடிய கட்சிகளிலும், தேசியக் கட்சிகளிலும் நடிகைகள் அவ்வப்போது சேர்வதும், பின்னர் பெரியளவில் அடையாளமின்றிப் போவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மேலிடத்தின் செல்வாக்கு இருந்தால் ஜெயலலிதா போலவும், ஜெயலலிதா வேடத்தில் நடித்த கங்கணா ரணவத் மற்றும் ஹேமமாலினி, ஜெயப்ரதா போல எம்.பி. போல ஆகலாம்.
சரோஜாதேவி அத்தகைய செல்வாக்கை விரும்பவில்லை. தன் திறமையை நம்பினார். அதனால், திரையுலகின் நிரந்தர நட்சத்திரமாக அவர் புகழ் ஒளிரும்.