இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களை பழக்குவது பாவ காரியமாகும். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம் என்று அதிமுகவினருக்கு தனது தலைமயிலான அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பாக அழைப்பு விடுத்துள்ளார் ஓபிஎஸ்.
மக்களவை தேர்தல் படுதோல்வியால், 8 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்திருக்கும் நிலையில், 3 இடங்களில் அதிமுக 4வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் நிலையில், ஓபிஎஸ் விடுத்த இந்த அழைப்பை அதிமுக நிராகரித்துள்ளது. ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது அவருடன் இருந்தவர்களில் முதுகெலும்பாக இருந்தவர் கே.பி.முனுசாமி. அவர்தான் ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்துள்ளார்.
’’அதிமுகவில் எப்படியாவது குழப்பத்தை ஏற்படுத்த சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வமும் முயற்சிக்கின்றனர். அதிமுக தலைவர்களுக்கு சசிகலா அழைப்பு விடுத்து 24 மணி நேரமாகியும் யாரும் சென்றதாக தெரியவில்லை.
இரட்டை இலை சின்னத்தை முடக்க நீதிமன்றம் சென்றவர்தான் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்த அண்ணாமலையை புகழ்ந்து அவரோடு கூட்டணி அமைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். பாஜகவுடன் இணைந்து அதிமுகவுக்கு எதிராக ராமநாதபுரத்தில் போட்டியிட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக தொண்டர்களை அழைக்கவும், அதிமுக பற்றி பேசவும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உரிமையில்லை’’ என்று செய்தியாளர்கள் சந்திப்பில் காட்டமாக விளக்கம் அளித்துள்ளார் கே.பி.முனுசாமி.
அதிமுகவினர் ஒன்றுபட வேண்டும் என்று சசிகலாவும், ஓபிஎஸ்சும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதை நிராகரித்து விமர்சித்துள்ள முனுசாமி, ’’மக்களவை தேர்தலில் மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்’’என்று குறிப்பிட்டுள்ளார்.
‘’தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம், ஓர் வழி நின்று நேர் வழி சென்றால் நாளை நமதே’’ என்ற அதிமுகவின் குடும்ப பாடலை பாடி, பழசை எல்லாம் மறந்து ஒன்றுபடலாம் என்று சசிகலாவும், ஓபிஎஸ்சும் விடுத்த அழைப்பை அதிமுக நிராகரித்துள்ளது அதிமுக பிரிவு அணிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.