தேர்தல் முடிவுகள் ஒருவேளை சாதகமாக அமையாமல் போனால் கட்சி உடைந்து கைவிட்டு போய்விடுமோ என்கிற அச்சத்தில் தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னரே சிலவற்றை சரிக்கட்ட நினைக்கிறார் இபிஎஸ் என்கிறது அதிமுக வட்டாரம்.
மீண்டும் ஒருங்கிணைப்பாளர் – இணை ஒருங்கிணைப்பாளர் தலைவலி வந்துவிடும் என்பதால் சீனியர்கள் பலரும் அறிவுறுத்தி வருவது போல ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கட்சிக்குள் சேர்ப்பதை விட சசிகலாவை தன் பக்கம் இழுத்துவிட்டால் முக்குலத்தோர் வாக்குகள் பலம் கிடைத்து விடும் என்று கணக்கு போடுகிறாராம் இபிஎஸ். அதனால், அதிமுகவிற்குள் மீண்டும் வந்துவிட வேண்டும் என்று துடிக்கும் சசிகலாவிடம் டீல் பேசி இருக்கிறார் இபிஎஸ்.
அதிமுகவிற்குள் வருவது மட்டும் சசிகலாவின் கனவு அல்ல; அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகவேண்டும் என்பதுதான் பெருங்கனவு. பேச்சுவார்த்தையில் இதை அறிந்து அதிர்ந்து போயிருக்கிறார் இபிஎஸ். சசிகலாவின் உறவினரும் ஓய்வு பெற்ற பி.ஆர்.ஓ. கண்ணதாசன் மூலம்தான் சசிகலா – இபிஎஸ் தரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை தனக்கு தர வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்கிறார்.
பொ.செ. பதவியை தந்துவிட்டால் பழைய கதை திரும்பிவிடும். தனக்குள்ள அதிகாரம் எல்லாம் பறிக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்த இபிஎஸ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லையாம். ஆதிமுகவுக்கு ஆதரவு நிலையில் மட்டுமே சசிகலா இருக்கட்டும் என்று நினைக்கிறாராம் இபிஎஸ். அதற்கு பிரதிபலனாக பொருளாதார ரீதியாக என்ன நிபந்தனை வைத்தாலும் அதை ஏற்று நிறைவேற்றுகிறேன். ஆனால், அதிகாரத்தை மட்டும் எக்காரணம் கொண்டும் இழக்க மாட்டேன் என்று கறாராக சொல்லி இருக்கிறார் இபிஎஸ்.
அதிகாரம் கைக்கு வந்தால் பொருளாதாரம் எல்லாம் தானாகவே வந்து குவிந்துவிடும் என்பதை அறியாதவரா என்ன சசிகலா? அதனால்தான் அவர் பொ.செ.விலேயே குறியாக இருக்கிறாராம். இதனால் சசிகலா – இபிஎஸ் தரப்பு இடையே நடந்த டீல் முடிவுக்கு வராமல் போயிருக்கிறது.
இதற்கிடையில், தன்னை அரசியல் வாரிசாக அறிவிக்க வேண்டும் என்று இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறாராம் எஸ்.பி.வேலுமணி.
இதனால், ‘நான்கு பக்கமும் உடைத்துக்கொண்டால் நான் அதற்கு என்ன செய்வேன்’ என்கிற மனநிலையில் இருக்கிறார் இபிஎஸ்.