வைத்திலிங்கத்தை செங்கோட்டையன் சந்தித்து பேசி இருந்த நிலையில் சசிகலாவை வேலுமணி சந்தித்து பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த எடப்பாடி பழனிச்சாமி ஆத்திரத்தில் யாரையும் சந்திக்க விரும்பாமல் தனக்குத்தானே வேலி போட்டுக்கொண்டிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் செங்கோட்டையன் தலைமை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வர, செங்கோட்டையனும் ஒருங்கிணைந்த அதிமுகவை கொண்டுவரும் முனைப்பில் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்து பேசியுள்ளார். ஜூன் -4 ல் தேர்தல் முடிவுகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக அமைந்து அவரது செல்வாக்கு உயர்ந்துவிடும் நிலை இருந்தால் என்ன செய்வது? என்று யோசித்துதான் இந்த சந்திப்பு குறித்து அவர் வெளியே பேசாமல் மவுனம் காத்து வருகிறார்.
ஒன்றியத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அக்கட்சியை எதிர்த்து நிற்பது என்பது இயலாத காரியம். அதே நேரம் சசிகலாவை வைத்து பாஜக ஒரு ஆட்டம் ஆடும். அதற்கு இடம் கொடுக்காமல் இப்போதே சசிகலாவை கட்சிக்குள் இழுத்துவிடலாம் என்று அதிமுக சீனியர்கள் பலரும் விரும்புகிறார்களாம்.
இதற்கிடையில், ஓபிஎஸ் அணியில் அதிருப்தி வெடித்திருக்கிறது. தன் நலம் மட்டுமே பெரிது என்று ஓபிஎஸ் நினைப்பதாகச் சொல்லி அந்த அணியினர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஓபிஎஸ் அணியின் முக்கிய தூணாக இருக்கின்ற வைத்திலிங்கம், புகழேந்தி உள்ளிட்டோர் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்கிற தகவல் பரவுகிறது.
இந்த நிலையில் வைத்திலிங்கத்தை தங்கள் பக்கம் இழுத்துவிடலாம் என்று நினைத்து அவரை சந்தித்து பேசிவரச்சொல்லி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், வேலுமணியோ, வைத்திலிங்கத்தை சந்திக்காமல் சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு வந்திருக்கிறார்.
இதில் எடப்பாடி பழனிச்சாமியின் கண்கள் சிவந்து போயிருக்கின்றன. நான் ஒரு கணக்கு போட்டால் வேலுமணி வேறு ஒரு கணக்கு போடுகிறாரே என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.
தனது தலைமையை ஒதுக்கி அடுத்து செங்கோட்டையனா? வேலுமணியா? என்ற பேச்சுக்கள் இருந்து வரும் நிலையில் தன் பேச்சை கேட்காமல் சசிகலாவை வேலுமணி சந்தித்ததால் , யாரையும் சந்திக்க முடியாத மனநிலையில் உள்ளாராம். கட்சியினர் அனுமதி கேட்டால், தேர்தல் கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன் என்று எஸ்கேப் ஆகிவிடுகிறாராம்.
தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் சுருட்டிக்கொண்டதால் அந்த கணக்கை பார்த்து வருகிறார்கள் என்றால், விரைவில் கட்சிக்குள் களையெடுப்பு இருக்குமோ என்று பதைபதைப்பில் இருக்கின்றனர்.