
சசிகலா அங்கே வருகிறார் என்று தெரிந்ததுமே அப்பகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தை ரத்து செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலாவை எந்த காலத்திலும் அதிமுகவில் சேர்க்க மாட்டேன் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார் சசிகலா.
வரும் 16ம் தேதி அன்று இந்த சுற்றுப்பயணத்தை அவர் தென்காசியில் தொடங்க விருக்கிறார். தென்காசியில் 16ம் தேதி தொடங்கும் இந்த சுற்றுப்பயணம் 20ம் தேதி வரையிலும் 4 நாட்கள் தென்காசி மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

சட்டப்பேரவை தொகுதி வாரியாக சென்று தொண்டர்களை சந்திக்கிறார் சசிகலா. பிற மாவட்டங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவாளர்களை சந்திக்க உள்ளார் சசிகலா.
இந்த நிலையில், தலைமை அலுவலகத்தில் வரும் 17ம் தேதி அன்று நடைபெற இருந்த ஆலோசனைக்கூட்டத்தை ரத்து செய்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து, நாடாளுமன்ற தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. 10.7.2024 முதுஅல் 19.7.2024 வரையிலும் ஆலோசனைக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதன்படி ஆலோசனைக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இன்றைய தினம் தஞ்சாவூர் மாவட்ட கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. வரும் 17ம் தேதி அன்று நடைபெற இருந்த கூட்டத்தை மட்டும் ஒத்திவைத்து, கூட்டம் நடைபெறும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார் எடப்பாடி.

17ம் தேதி அன்று நடைபெறும் கூட்டத்தில் தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டம் அதிமுக நிர்வாகிகள் பங்குபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் சசிகலா தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்வதால், அன்றைய நாளில் சென்னையில் கூட்டம் நடத்தினால் தேவையில்லாத சிக்கலை உருவாக்கும் என்று 17ம் தேதி கூட்டத்தை மட்டும் ஒத்தி வைத்திருக்கிறார் எடப்பாடி.