இன்றைக்கு ஆட்சி இருக்கும் நிலையில் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்று உறுதிபடக் கூறியுள்ளார் நடிகர் சத்யராஜ்.
நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது. நாம் ஆட்சியில் இல்லாவிட்டாலும் யார் பிரதமராக இருந்தாலும் முதல்வர் ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சொல்வதை கேட்டுத்தான் ஆகவேண்டும். அப்படி அவர்கள் கேட்கவில்லை என்றால், இன்றைக்கு பாஜக ஆட்சி இருக்கும் சுழ்நிலையில் அவர்கள் 2 பேரிடமும் சொன்னாலே நமக்காக வேலையை அவர்கள் செய்து கொடுத்து விடுவார்கள் என்றார் சத்யராஜ்.
திருச்சி மாவட்ட திமுக மாநகர ஓட்டுநர் அணி சார்பாக திருவெறும்பூர் அருகே நடந்த கலைஞர் நூற்றாண்டு நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்க, சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் சத்யராஜ் மேற்கண்டவாறு தனது கருத்தை தெரிவித்தார்.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் நீட் விலக்கு அளிக்கப்படும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்த நிலையில், இந்தியா ஆட்சிக்கு வந்ததும் நீட் விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று ராகுல்காந்தியும் உறுதி அளித்திருந்தார். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வராவிட்டாலும் நீட் ரத்து கொண்டு வர முடியும் என்பதை சத்யராஜ் விளக்கம் அளித்தபோது அவை ஆரவாரம் செய்தது.
பாஜகவின் கோட்டையான உத்தரபிரதேசத்தில் இந்தியா கூட்டணி செய்த சாதனயையும் குறிப்பிட்டு பேசினார் சத்யராஜ். ‘’வடமாநிலத்தில் கல்வித்தரம் சரியாக இல்லாததால், மற்ற நாடுகளின் கல்வித்தரத்தோடு போட்டி போட்டுகொண்டு செயல்பட்டு வருவதால்தான் வடமாநில தொழிலாளர்கள் தமிழகம் நோக்கி அதிகம் வருகின்றனர்.
தமிழகத்திற்கு வந்தால் அமெரிக்கா, லண்டனில் வாழ்வது போல் வாழலாம் என்று வடமாநிலத்தவர் நினைக்கின்றார்கள். அந்த அளவிற்கு தமிழகத்தில் கல்வித்துறையின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது’’ என்றவர்,
‘’சுயமரியாதை, பகுத்தறி, பெண் விடுதலை பற்றி எல்லாம் இங்கு வரும் வடமாநிலத்தவர்களுக்கு நாம் சொல்லிக்கொடுக்க வேண்டும். அப்படிச்செய்தால் வட மாநிலங்களில் நடக்கும் கொடுமைகள் தடுக்கப்படும்’’என்றார்.
தமிழகத்தில் பாமர மக்களிடையே திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்த்தது போல் வட மாநிலத்திலும் திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்த்தால் அவர்களும் திராவிட மாடல் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள். உத்தரபிரதேசத்தில் பாதிக்கு பாதிதான் பாஜக வந்திருக்கிறது. அம்மக்களுக்கு திராவிட சித்தாந்தம் தெரிந்திருந்தால் முழுமயாக அங்கே நாம் வென்று இருக்கலாம். அதனால் அவர்களுக்கு திராவிடம் பற்றி எடுத்துச்சொல்ல ஆட்களை நியமிக்க வேண்டும். அதற்கு நான் உதவ தயாராக இருக்கிறேன்.
கட்டப்பாவாக என்னை தெரியும் என்பதால் பீகார், பெங்கால், அசாம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு திராவிட மாடலை கொண்டு செல்ல வேண்டிய கருவியாக இருப்பேன்’’ என்று உணர்ச்சி பொங்க பேசி அவையை ஆராவாரக்கடலில் மூழ்கடித்தார்.