சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்யிட்டு வந்த நாம் தமிழர் கட்சிக்கு நடைபெற்ற மக்களவைத்தேர்தலில் கரும்பு சின்னம் மறுக்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி இல்லை என்பதால் நிரந்தரச்சின்னம் ஒதுக்க முடியாது. முதலில் வருபருக்கே முன்னுரிமை என்கிற அடிப்படையில் கர்நாக மாநிலத்தை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு விட்டது என்று பதில் அளித்திருந்தது தேர்தல் ஆணையம்.
கரும்பு விவசாயி சின்னச்தை பெற்றுவிட உச்சநீதிமன்றம் சென்றும் நாம் தமிழர் கட்சி போராடியது. ஆனால் அச்சின்னம் கிடைக்கவேயில்லை. கரும்பு சின்னத்தை பெற்ற கர்நாடக மாநில கட்சி தமிழகத்திலும் பல தொகுதிகளில் போட்டியிட்டு சீமானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.
நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை பறித்ததோடு அல்லாமல் அக்கட்சியை தமிழகத்தில் கூட்டணிக்கு வருமாறு அழைத்தும் சீமானை வெறுப்பேற்றியது அந்த கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி.
தேர்தலுக்கு மிக குறைந்த காலமே இருந்த நிலையில்தான் கரும்பு விவசாயிக்கு பதிலாக மைக் சின்னம் கிடைத்தது. ஆனாலும் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரங்களின் மூலமாகவும் மைக் சின்னத்தை மக்களிடையே கொண்டு சேர்த்து தமிழகத்தில் அதிக வாக்கு சதவிகிதத்தை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்தியது நாதக.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் 35,60,485 வாக்குகளை பெற்றது நாதக. 8.2% வாக்குகளை பெற்றுவிட்டதால் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்திருக்கிறது நாதகவுக்கு.
இந்நிலையில் நடைபெற இருக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்பதால் நாதக கேட்கும் சின்னம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இதற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, ‘’விசிக, நாம் தமிழர் கட்சிகள் அங்கீகரிக்கப்பட்டதை தலைமை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும். அதன் பின்னர்தான் இடைத்தேர்தலில் சின்னம் ஒதுக்குவது குறித்து முடிவெடுக்கப்படும்’’ என்கிறார். தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் மூலம் நாதகவுக்கு இடைத்தேர்தலில் மைக் சின்னம் கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.