
தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தும் திட்டத்தினை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. மானியம் மற்றும் வங்கிக்கடன் உதவியுடன் கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களை கடந்த ஆண்டில் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த கழிவுநீர் அகற்றும் வாகனம் வழங்கப்பட்ட பின்னர் 7 வருடங்களுக்கு அந்த வாகனம் சிஎம்டிஏவுக்கு வேலை செய்ய ஒப்பந்தம் செய்யப்படும் என்றும் அந்த 7 வருடமும் பயனாளிகளுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேல் கிடைக்க வாய்ப்புள்ளது என்று சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார் யூடியூபர் சவுக்கு சங்கர். இந்த ஒப்பந்த நிறுவனத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையின் சொந்த அண்ணன் மகன் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

’’மாசா மாசம் எந்த வேலையும் செய்யாமலே உனக்கு 50 ஆயிரம் ரூபா தர்றேன். குடிச்சுட்டு ஜாலியா வீடுலயே இருன்னு சொன்னா அந்த துப்புறவு தொழிலாளிகளுக்கு என்ன கசக்குமா? இந்த திட்டம் அறிமுகப்படுத்தும் போது முதல்வர் எங்களுக்கு தந்தை மாதிரின்னு குடுத்த காசுக்கு மேல நடிக்கணும். நீ இத செஞ்சா 7 வருசத்துக்கு மாசா மாசம் 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு சொன்னா கசக்குமா அந்த ஏழை தொழிலாளிகளுக்கு?’’ என்று அந்த யூடியூப் வீடியோவில் தெரிவித்திருந்தார் சவுக்கு சங்கர்.
பயனாளிகள் 213 பேரில் 87 பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள். மீதமுள்ளோர் செல்வப்பெருந்தகையின் பினாமிகள் என்றும் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார் சங்கர்.
கடந்த ஆண்டு 2024ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று இந்த வீடியோ வெளியாகி இருந்தது.
வீடியோ வெளியானதில் இருந்து சவுக்கு சங்கர் தங்களை இழிவுபடுத்தி விட்டதாக ஆத்திரத்தில் இருந்த தூய்மைப் பணியாளர்கள் சார்பாக தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சவுக்கு சங்கரின் இல்லத்திற்கு சென்று அவரது வீட்டில் கழிவு நீர் மற்றும் மலம் கொட்டி தங்களது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர் தூய்மைப் பணியாளர்கள்.