சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து அவரது தாயார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் விலகி இருக்கிறார். அதாவது, தான் இடம்பெறாத அமர்வில் சவுக்கு சங்கர் தொடர்பான மனுவை பட்டியலிடுமாறு தலைமை நீதிபதிக்கு கோப்புகளை அனுப்பி வைத்துள்ளார்.
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள். நீதிபதி சாமிநாதன் தீர்ப்பில், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்தும், நீதிபதி பி.பி. பாலாஜி தீர்ப்பில், குண்டர் சட்டம் விதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனச்சொல்லி கால அவகாசம் அளித்தார்.
நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு சர்ச்சைக்குள்ளானதை அடுத்து, உயர்மட்டத்தில் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகத்தான் இந்த வழக்கை விசாரணைக்காக அவசரமாக எடுத்தேன் என்று விளக்கம் அளித்தார்.
வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி ஜெயச்சந்திரன், எதிர்தரப்பினருக்கு பதில் அளிக்க கால அவகாசம் வழங்காமல் அவசரகதியில் நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.
அரசின் விளக்கத்தை கேட்காமலேயே குண்டர் சட்டத்தை ரத்து செய்தது ஒரு தரப்பினருக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை என்பதை காட்டுகிறது. ஆட்கொணர்வு மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என்று, நீதிபதி பாலாஜியின் தீர்ப்பை ஏற்று, அத்துடன் அந்த வழக்கை இரண்டு நீதிபது கொண்ட ஆட்கொணர்வு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றினார். அதன்படி இந்த மனு இரண்டு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் கூடுதல் அவகாசம் கோரியதை ஏற்று, வழக்கை தள்ளிவைத்தனர்.
இதை எதிர்த்துதான் சவுக்கு சங்கரின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் – பர்வீன்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் வழக்கு நீதிபதி சுவாமிநாதனை அடுத்து நீதிபதி எம்.எம்.சுந்தரேஷும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறார். நீதிபது சுவாமிநாதனுக்கு வந்தது போன்று உயர்மட்டத்தில் இருந்து அழுத்தங்கள் வந்ததால் அவர் இந்த வழக்கில் விசாரணையில் இருந்து விலகினாரா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.