யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து அவரது தாயார் கமலா தொடர்ந்து வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணைக்கு பின்னர் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.
மாறுபட்ட தீர்ப்பை சொன்ன நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அதிகாரமிக்க 2 பேர் அழுத்தம் கொடுத்ததால்தான் தான் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் இன்று காலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளார். இந்த மனுவின் நகல்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், உச்சநீதிமன்ற தலைமை பதிவாளருக்கும் அனுப்பி இருக்கிறார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு அழுத்தம் கொடுத்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர வேண்டும் என்று உயர்நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரித்தால் முழு உண்மை வெளிவரும் என்று மனுதாரர் யானை ராஜேந்திரன் கூறியிருக்கிறார். வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றங்கள் கடந்த காலங்களில் பல வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. ஆனால், இதே போன்று நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்படவில்லை. ஆனாலும், நீதிமன்றம் நினைத்தால், தலைமை நீதிபதிக்கு அந்த அதிகாரம் இருப்பதால் தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன.