வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்தால், அதற்கு எதிராக அவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வங்கிகளுக்கு உண்டு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மோசடியான பணப் பரிவர்த்தனைகளைக் கண்டறிந்து தடுப்பதற்கு, மிகச் சிறந்த தொழில்நுட்பத்தை வங்கிகள் கொண்டுள்ளன எனவும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
வாடிக்கையாளர் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை திருப்பி அனுப்ப முயன்றபோது, Customer Care-ல் இருந்து பேசுவதாக கூறி அழைப்பு வந்துள்ளது; அந்த மோசடி நபரின் அழைப்பை நம்பி ஒரு மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்த வாடிக்கையாளர், ரூ.94 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார்.
ஏமாந்த வாடிக்கையாளர் SBI வங்கியிடம் புகார் தெரிவித்த நிலையில், பணத்தை மீட்டுத் தர வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது. அதை அடுத்து வாடிக்கையாளர் வழக்குத் தொடர்ந்த நிலையில், கவுகாத்தி உயர் நீதிமன்றம் வாடிக்கையாளருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது.
அங்கீகரிக்கப்படாத பணப் பரிவர்த்தனைக்கு பொறுப்பேற்க மறுத்தும் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்தும், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த SBI தற்போது கொட்டு வாங்கியுள்ளது.
“மூன்றாம் தரப்பு மீறல்களில் இருந்து எழும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் பொறுப்பு அல்ல, அவர்களின் தவறல்ல; அது குறித்து உடனடியாகப் புகாரளிக்கப்பட்டால், பணத்தை மீட்டுத் தருவது வங்கிகளின் பொறுப்பு” என ரிசர்வ் வங்கியின் விதிகளை சுட்டுக்காட்டி இருந்தது கவுகாத்தி உயர் நீதிமன்றம்.
கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் கருத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், SBI வங்கி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், மோசடியான பரிவர்த்தனை நடந்த 24 மணி நேரத்திற்குள், வாடிக்கையாளர் வங்கியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார் என்பதை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் OTP உள்ளிட்ட எந்த முக்கிய விவரங்களையும் மூன்றாம் தரப்பினருக்கு பகிரக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.