பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த தகவல்களை உடனக்குடன் கொண்டு செல்ல வாட்ஸ் அப் சேவையை கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை. இதற்கான சோதனை முயற்சிகள் நடந்து முடிந்துள்ளன. இதன் மூலம் இந்த திட்டம் 10% வெற்றி பெற்றிருக்கிறது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெற்ற பின்னர் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது.
ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உடனுக்குடன் பள்ளிக்கல்வி துறை சார்ந்த தகவல்கள் நிறைய சிரமங்கள் உள்ளன. இந்த குறையினை நிவர்த்தி செய்யவே புதிய திட்டமாக வாட்ஸ் அப் சேவை திட்டம் கொண்டு வரப்படுகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் கல்வித்துறை சம்பந்தமான அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு எளிதில் கொண்டு செல்ல இருக்கிறது இந்த திட்டம். அந்தந்த மாவட்டங்களிலிருக்கும் கல்வி நிறுவனங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் உடனுக்கு தகவல் கிடைக்க இந்த திட்டம் வழி வகுக்கிறது.
ஏற்கனவே 1 கோடியே 16 மாணவர்களின் செல்போன் எண்களை வைத்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. அந்த எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. அதிலும் நிறைய சிரமங்கள் உள்ளன. 1 கோடியே 16 லட்சம் எண்களில் நிறைய எண்கள் தவறானதாகவும், உபயோகத்தில் இல்லாததாகவும் உள்ளன. இதனால் வாட்ஸ் அப் திட்டம் கொண்டுவரும்போது அந்த சிக்கல்கள் இருக்கக்கூடாது என்பதற்காக மாணவர்கள், பெற்றோர்களின் சரியான எண்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளிகல்வித்துறை செயலாளர் குமரகுருபரன், ‘’அலைபேசி எண்ணுக்கு பள்ளிகல்வித்துறை ஒரு OTP அனுப்பும். அந்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலம் அங்கீகரிக்கப்படும். குழுவினர் அந்த எண்ணை சரிபார்த்துக்கொள்கின்றனர்.
அதன் பின்னர், அன்புடையீர் வணக்கம். தங்களது அலைபேசி எண்ணை OTP மூலம் உறுதிப்படுத்தி , பள்ளிகல்வித்துறை சார்ந்த தகவல்களை பகிர ஏதுவாக்கியதற்கு மிக்க நன்றி. இணைந்து பயணிப்போம். – தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை என்ற குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். ’’ என்கிறார்.
அவர் மேலும், ‘’ இந்த திட்டத்திற்காக செல்போன் எண்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. திருவாரூர், ராணிப்பேட்டை மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் அந்தந்த மாவட்ட மாணவர்களின் எண்களை சேகரித்து கொடுத்துள்ளன. இதன் மூலம் இந்த திட்டத்தின் 10% பணிகள் முடிந்துள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் இப்பணிகள் நடந்து முடிவுறும்.
அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும்பள்ளிகள், தனியார் பள்ளிகளின் மாணவர்களின் அலைபேசி எண்கள் அல்லது பெற்றோர்களின் எண்கள், அல்லது அவர்களின் பாதுகாவலர்களின் எண்கள் இந்த வாட்ஸ் அப் குழுவில் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிக்கல்வித்துறையின் மாநில அதிகாரிகள் அறிவொளி, பழனிச்சாமி, கண்ணப்பன் ஆகியோர் இந்த வாட்ஸ் அப் குழுவினை கையாண்டு வருகின்றனர். அடுத்தகட்டமாக மாவட்ட கல்வி அதிகாரிகளும் கையாளும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில், துறை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த குழுவினை கையாளுவார்கள்’’என்கிறார்.
மக்களவைத் தேர்தல் நடத்தை அமலில் இருப்பதால், அந்த விதிகள் வாபஸ் பெற்ற பின்னர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த திட்டத்தினை நடைமுறைக்கு கொண்டு வரவிருக்கிறார்.
தனியார் பள்ளிகளில் பள்ளி நிர்வாகம் – ஆசிரியர்கள் – பெற்றோர் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ் அப் சேவை இருந்து வருகிறது. ஆனால் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள் – பெற்றோர்கள் – மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறை இடையே வரும் வாட்ஸ் அப் சேவை திட்டம் அசரவைக்கிறது.