உலகின் மிகச்சிறிய ஆட்டோமெட்டிக் ரோபோக்களை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழக பொறியாளர்கள் உருவாக்கியுள்ள நுண்ணிய ரோபோக்கள் (Micro-robots), தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு மாபெரும் மைல்கல்லாகக் கருதப்படுகிறது. வெறும் 0.2 x 0.3 மில்லிமீட்டர் அளவே கொண்ட இந்த ரோபோக்கள், ஒரு மனிதக் கூந்தலின் தடிமனை விடச் சிறியவை. இவ்வளவு சிறிய உருவத்திற்குள் ஒரு நுண்செயலி (Microprocessor), உணர்விகள் (Sensors) மற்றும் நகர்வதற்கான கால்கள் என அனைத்தும் அடங்கியுள்ளன என்பது வியப்பிற்குரிய விஷயமாகும்.
செயல்திறன் :
இந்த ‘தன்னாட்சி ரோபோக்களை’ (Autonomous Robots) மிச்சிகனில் உருவாக்கப்பட்ட ஒரு நுண் “மூளை”யால் வழிநடத்தப்பட்டு, ஒளியின் மூலம் மின்சாரத்தைப் பெற்று, எவ்விதமான கம்பிகளும் இணைக்கப்படாமல் தன்னாட்சியாகச் செயல்படும் திறன் கொண்டவை ஆகும்.

மருத்துவத்துறையில் சாதனை :
குறிப்பாக, இவை உடலில் ஊடுருவிச் சென்று புற்றுநோய் செல்களைக் கண்டறியவும், மிகச்சரியான இடத்திற்கு மருந்துகளைக் கொண்டு சேர்க்கவும் (Targeted Drug Delivery) எதிர்காலத்தில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மனிதக் கண்களுக்குப் புலப்படாத இந்த குட்டி இயந்திரங்கள், நவீன மருத்துவ உலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு புதிய தொடக்கமாக அமையும்.
இதன் சிறப்பம்சங்கள்:
- கண்ணுக்குத் தெரியாத அளவு: இது வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறியது.
- திறன்: இது தானாகவே நகரவும், சிந்திக்கும், நீந்தும், தகவல் பரிமாற்றம் செய்யும் ஒரு அதிநவீன ரோபோ ஆகும்.
- பயன்பாடு: எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் மனித உடலுக்குள் சென்று அறுவை சிகிச்சை செய்யவும், மருந்துகளைத் துல்லியமாகச் செலுத்தவும்,நோயை முன்கூட்டியே கண்டறியவும் இது பயன்படுத்தப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
