இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (ISRO), இந்திய அறிவியல் கழகமும் (IISc) இணைந்து, செவ்வாய் கிரகத்தின் மண்ணுடன் பாக்டீரியா (bacteria) மற்றும் யூரியாவைச் சேர்த்து, செங்கற்களை உருவாக்கி வீடுகளையும், பிற கட்டமைப்புகளையும் கட்டுவதற்கு கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாய் கிரகமும் மனிதர்களும்!
பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தை பற்றியும், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் விஞ்ஞானிகள் (Scientists)ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.மேலும், செவ்வாய் கிரகம் மிக அருகில் இருப்பதாலும், ஓரளவு வளிமண்டலம் மற்றும் தண்ணீர் இருப்பதாலும், 2030களில் மனிதர்களை அங்கு அனுப்ப நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு மையங்கள் திட்டமிட்டுள்ளன.

ஆனால், விண்வெளிப் பயணச்செலவு என்பது அதிகம் என்பதால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கே கோடிக்கணக்கில் செலவாகும் என்ற நிலை உள்ளது. மேலும் அவர்களுக்குத் தேவையான வீடு கட்டும் பொருட்கள், கருவிகள் என எல்லாவற்றையும் பூமியில் இருந்து கொண்டு செல்வது என்பது சாத்தியமற்ற செயல்.
ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு
இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ISRO) இணைந்து, இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள் குழு, பாக்டீரியா மற்றும் யூரியாவைப் பயன்படுத்தி செவ்வாய் கிரக மண்ணிலிருந்து செங்கற்களை தயாரிப்பதற்கான ஒரு நிலையான முறையை உருவாக்கியுள்ளது. இந்த “விண்வெளி செங்கற்களை” செவ்வாய் கிரகத்தில் கட்டிடம் போன்ற கட்டமைப்புகளை உருவாக்க பயன்படுத்தலாம், இது சிவப்பு கிரகத்தில் மனித குடியேற்றத்தை எளிதாக்கும்.

பாக்டீரியாவை பயன்படுத்தி செங்கற்கள்
செவ்வாய் (Mars) மண்ணை (சிமுலண்ட்) குவார் கம், ஸ்போரோசார்சினா பாஸ்டூரி எனப்படும் பாக்டீரியா , யூரியா மற்றும் நிக்கல் குளோரைடு (NiCl 2 ) ஆகியவற்றுடன் கலப்பதன் மூலம் முதலில் ஒரு குழம்பு உருவாக்கப்படுகிறது. இந்த குழம்பை எந்த விரும்பிய வடிவத்தின் அச்சுகளிலும் ஊற்றலாம், மேலும் சில நாட்களில் பாக்டீரியா யூரியாவை கால்சியம் கார்பனேட்டின் படிகங்களாக மாற்றுகிறது. இந்த படிகங்கள், நுண்ணுயிரிகளால் சுரக்கப்படும் பயோபாலிமர்களுடன் சேர்ந்து, மண் துகள்களை ஒன்றாக வைத்திருக்கும் சிமெண்டாக செயல்படுகின்றன. இந்த முறையின் ஒரு நன்மை செங்கற்களின் குறைக்கப்பட்ட போரோசிட்டி ஆகும், இது செவ்வாய் மண்ணை செங்கற்களாக ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்படும்.

ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பாக்டீரியா
மேலும், இது கட்டடங்களைக் கட்டுவதோடு மட்டுமல்லாமல் பலதரப்பட்ட செயல்களுக்கு பயன்படுகிறது. அதாவது, Chroococcidiopsis என்ற பாக்டீரியாவிற்கு ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. மற்ற பாக்டீரியாவின் வளர்சிதை மாற்றத்தின்போது உருவாகும் அம்மோனியாவை, செவ்வாயில் ‘மூடிய வளைய விவசாய அமைப்புகளை’ உருவாக்கப் பயன்படுத்தலாம்.மேலும், நீண்ட கால நோக்கில், செவ்வாயை பூமிக்கு ஏற்றவாறு மாற்றும் முயற்சிக்கும் இது உதவக்கூடும் என்பதால் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் தங்கள் சொந்த வீட்டை பாக்டீரியாவைக் கொண்டே உருவாக்கி, சொந்தமாகவே விவசாயம் செய்து உயிர் வாழ வழிவகுக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்மைகள்:
- செவ்வாய் கிரகத்திலேயே கட்டுமானப் பொருட்களை உருவாக்க முடியும்.
- பூமியில் இருந்து அதிகப்படியான பொருட்களை எடுத்துச் செல்லும் சுமையைக் குறைக்கிறது.
- செவ்வாய் மண்ணின் தன்மையை மேம்படுத்தி உறுதியான கட்டுமானப் பொருட்களை உருவாக்குகிறது.
- இந்த ஆராய்ச்சி, செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதில் ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.
