அதிமுகவை விட்டு ஓ.பன்னீர்செல்வத்தை விலக்கியதில் இருந்தே கொடநாடு வழக்கில் எடப்பாடியை பழனிசாமியை தொடர்புபடுத்தி செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.
நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசியர் பொறுப்பில் இருந்து விலகியபோது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருக்கிறது பொதுவெளியில் போட்டு உடைத்தார்.
சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்ட பலரும் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புள்ளது. அதனால் அவரை விசாரிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் ஜெயலலிதாவுக்கு கார் டிரைவராக இருந்தாலும் பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பதால் கொடநாடு வழக்கில் பழனிசாமியின் மீது பலரும் சந்தேகம் எழுப்பி வந்தனர்.
எவ்வளவோ போராடிப்பார்த்தும் அதிமுகவில் ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று பழனிசாமி உறுதியாக கூறிவிட்டதால் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கொடநாடு வழக்கை தீவிரமாக கையில் எடுத்துள்ளனர்.

ஒருங்கிணைப்பை வலியுறுத்தியதால் கட்சியில் இருந்தே தன்னை நீக்கிவிட்டதால், ’’கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிசாமி’’ என்று அழுத்தமாகச் சொல்கிறார். மேலும், ’’எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை வேண்டும் என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி ஏன் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரவில்லை?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
’’ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது அறையில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ரகசிய ஆவணங்களை கைப்பற்றினோம். அதை படித்துவிட்டு நானே தீயிட்டு எரித்தேன். அது போன்ற ரகசிய ஆவணங்கள் கொடநாட்டிலும் இருந்திருக்கலாம். அதை வைத்து நாங்கள் அவர்களை மிரட்டுவோம் என்ற பயத்தில் அந்த ஆவணங்களை தேடினார் பழனிசாமி. இதற்காக அந்த ஆவணங்களை கைப்பற்றுவதற்காக கொடநாட்டில் கொலை, கொள்ளை சம்பவத்தை அர் அரங்கேற்றி உள்ளனர்’’ என்று தற்போதும் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

கட்சியின் 53 ஆண்டுகால சீனியர் என்பதால் எடப்பாடி பழனிசாமிதான் ஏ1 குற்றவாளி என்று போகிற போக்கில் ஒன்றும் செங்கோட்டையன் சொல்லவில்லை என்றே தெரிகிறது. தவிர, தான் சொன்ன குற்றச்சாட்டிலும் அவர் உறுதியாக இருக்கிறார். கொடநாடு வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் என்கிறார். அதற்கேற்றார் போல், ‘’கொடநாடு வழக்கில் முக்கிய நபர்கள் பலருக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களை கண்காணித்து வருகிறோம். சரியான ஆதாரங்களுடன் குற்றத்தை நிரூபிப்போம்’’ என்கிறது சிபிசிஐடி தரப்பு.

தற்போது திமுகவில் இணைந்திருக்கும் மருது அழகுராஜ், மீண்டும் கொடநாடு வழக்கில் குரல் கொடுத்திருக்கிறார். ’’கொடநாடு பங்களா பகுதி தடையில்லா மின்சார வசதி பெற்ற பகுதி. அப்படி இருக்கும் போது கொலை, கொள்ளை சம்பவத்தின் போது பவர் கட் ஆனது எப்படி? சம்பவம் நடந்த சில தினங்களிலேயே இந்த வழக்கில் விசாரிக்கப்பட்டு வரும் சஜீவனுக்கு அதிமுகவில் மாநில பதவி வழங்கியது ஏன்? இதனால்தான் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். அதனால் அவரை விசாரிக்க வேண்டும்’’ என்கிறார் மருது அழகுராஜ்.
தேர்தல் நெருக்கத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு எடப்பாடியை நெருக்குவது அதிமுகவினரை கலக்கமடைய வைத்திருக்கிறது.
