இந்திய சுதந்திர நாளில் தனது 3.0 ஆட்சியின் முதல் ஆண்டில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையில் பல அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதுடன், சில கருத்துகளையும் வெளியிட்டிருக்கிறார். அதில் கவனிக்கத்தக்க ஒன்றாக, ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ என்பதாகும்.
இந்திய அரசியல் அமைப்பின் முகவுரையில் இணைக்கப்பட்ட மதச்சார்பற்ற, சோஷலிசம் போன்ற சொற்களை எப்படியாவது அகற்றிவிடவேண்டும் என்பதற்காகப் பல முயற்சிகளை பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வருவதையும், அது குறித்த விவாதங்களை அவ்வப்போது உருவாக்கி வருவதையும் காணலாம். மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் சார்ந்த பாடப்புத்தகங்களில, மதச்சார்பற்ற என்ற சொல்லை நீக்கியதாகவும் கல்வியாளர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் வந்தன.
மதச்சார்பற்ற என்ற சொல்லே வேண்டாம் என்று வலியுறுத்தக்கூடிய கட்சியின் ஆட்சியில், ‘மதச்சார்பற்ற சிவில் சட்டம்’ என்று பிரதமர் தெரிவித்திருப்பதன் அர்த்தம் என்ன?
பொது சிவில் சட்டம் என்று இத்தனை காலம் பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்ஸூம் சொல்லி வருவதற்குத்தான் மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்ற புதிய லேபிளை ஒட்டியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. தற்போது இருப்பது, ‘வகுப்புவாத சிவில் சட்டம்’ என்றும் அதை மாற்றி, ‘மதச்சார்பற்ற (பொது) சிவில் சட்டம்’ கொண்டு வரப்பட வேண்டும் என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மத அடிப்படையிலான வேறுபாடுகள் சட்டத்தில் இருக்கக்கூடாது என்றும் சுதந்திர தின உரையில் வலியுறுத்தியிருக்கிறார். இதை மேலோட்டமாகப் பார்க்கும்போது சரிதானே என்று தோன்றும். அதன் உள்அரசியல் ஆழமான நோக்கங்களைக் கொண்டவையாகும்.
ஒரு குற்றம் நடந்தால் அதற்கான தண்டனையை வழங்கும் குற்றவியல் சட்டங்கள் எல்லா மதங்களுக்கும் பொதுவானது. எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது. கொலை செய்த நபரை மதம் பார்த்தோ, சாதி பார்த்தோ சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை. (அரசியல், அதிகார, பணபலம், சட்டவாதம் போன்றவை தனிக்கதை). எந்த மதமாக இருந்தாலும், சாதியாக இருந்தாலும், ஊராக இருந்தாலும் இந்தியா முழுவதும் குற்றங்களுக்கானத் தண்டனை எல்லா மனிதர்களுக்கும் ஒன்றுதான். அதே நேரத்தில் பல மதங்களையும், பல இனங்களையும், பல்வேறு மொழி பேசும் மக்களையும் கொண்ட இந்தியாவில், அவரவர் பழக்க வழக்கங்களை மதித்து, பண்பாட்டு விழுமியங்களுக்குட்பட்ட சிவில் சட்டம் நடைமுறையில் உள்ளது.
எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் சுயமரியாதை திருமணச் சட்டம் நடைமுறையில் உள்ளது. வேதமந்திரங்கள் சொல்லாமல், அக்னி குண்டம் வளர்க்காமல், மாலை மாற்றிக்கொண்டோ-தாலி கட்டிக்கொண்டோ இந்தத் திருமணத்தை நடத்திக்கொள்ளலாம். இது இந்து மத திருமண முறைகளில் ஒன்றாக சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இத்தகைய திருமண முறையை இந்துக்கள் வாழும் பிற மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தலாம். நடைமுறைப்படுத்த மறுக்கலாம். அது அவர்களின் பண்பாட்டுத் தன்மையைச் சார்ந்தது.
ஆனால், தமிழ்நாட்டில் குடும்பப் பெரியவர்கள் முன்னிலையில் தமிழில் வாழ்த்து தெரிவித்து, திருமணத்தை நடத்திக் கொள்ளும் முறை பல சமூகங்களிலேயே நிலவுகிறது. மதச்சார்பற்ற சிவில் சட்டம் என்று மோடி சொல்கின்ற, பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், வடமாநிலங்களில் பெரும்பான்மை இந்துக்கள் கடைப்பிடிக்கும் திருமண முறையைத்தான் தென்மாநிலங்களில்-தமிழ்நாட்டில் இருப்பவர்களும் கடைப்பிடித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படும்.
இது ‘பொது’ என்ற அடிப்படையிலானதல்ல. ‘வலிந்து திணிக்கும்’ வகையைச் சார்ந்தது. பிரதமரும் பா.ஜ.க.வினரும் வலியுறுத்தும் ஆர்.எஸ்.எஸ். சித்ததாந்தம் அடிப்படையிலான மதச்சார்பற்ற (பொது) சிவில் சட்டம், மதப் பண்பாடுகளை மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி பேசுகிற மக்களின் பண்பாட்டிற்கும் எதிரானதாகும். இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒழித்து, சமஸ்கிருத மந்திரங்களை பண்பாடாகத் திணிக்கும் வல்லாதிக்கமாகும். பலவித மொழிகளையும் அதற்கேற்ற பழக்கவழக்கங்களையும் கொண்டுள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த பண்பாட்டையும் அச்சுறுத்துவதாகும்.
பா.ஜ.க. ஆட்சிக்கு ஆதரவளித்து வரும் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகள், மோடியின் மதச்சார்பற்ற சிவில் சட்டம் பற்றிய தெளிவு இல்லாமல் எந்தக் கருத்தையும் தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளன. முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான எந்த சட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்பதே அவர்களின் நிலைப்பாடு.
மதரீதியாக மட்டுமின்றி, தெலுங்குதேசம் ஆளுகின்றன ஆந்திராவின் பண்பாட்டையும், ஐக்கிய ஜனதாதளம் ஆளுகின்ற பீஹாரின் பண்பாட்டையும் சிதைக்கும் நோக்கமே அவர்களின் தயவில் ஆட்சி செய்யும் பிரதமரின் உரையில் வெளிப்படுகிறது.