சசிகலா, ஓபிஎஸ், தினகரன், வைத்திலிங்கத்திற்கு எக்காலத்திலும் அதிமுகவில் இடமில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக மறுத்தாலும் நாதகவுடன் கூட்டணி குறித்து எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார்.
மக்களவை தேர்தல் தோல்வியை அடுத்து தொடர் தோல்வியை சந்தித்து வரும் அதிமுக, எதிர்காலம் கருதி பிரிந்தவர்கள் இணைய வேண்டும் என்று கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 6 பேர் சேலத்தில் உள்ள எடப்பாடி வீட்டில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மக்களவை தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார் எடப்பாடி.
தஞ்சை மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அப்போது சசிகலா, ஓபிஎஸ், தினகரன், வைத்திலிங்கம் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர் நிர்வாகிகள். வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் பாதி பேர் அதிமுகவில் இணைந்திருக்கும் நிலையில், வைத்திலிங்கத்தை எக்காலத்திலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். சசிகலா, ஓபிஎஸ், தினகரனுக்கும் அதே பதிலை கூறியிருக்கிறார்.
சென்னையில் நடந்த அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு சீமான் ஆதரவு தந்தபோதே, எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்த போதெல்லாம் அதற்கு சீமான் கண்டனம் தெரிவித்தபோதே அதிமுக நாதக கூட்டணி சேர வாய்ப்பிருக்கிறது என்ற பேச்சு பரவியது. அதற்கு தகுந்தமாதிரி, இன்று நடந்த தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் நல்லது என்று நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
சசிகலா, ஓபிஎஸ், வைத்திலிங்கம், தினகரனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் எடப்பாடி, நாதகவுடன் கூட்டணி சேரவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் மறுக்காமல், அதே நேரம் அதற்கு பதிலேதும் சொல்லாமல் அமைதி காக்கிறார். இதனால் மவுனம் சம்மதமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.