நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போஸ்டர் அடித்த அதிமுக நிர்வாகி அவர் கைப்பட அவரே அந்த போஸ்டர்களை ஒட்டி இருக்கிறார்.
’’உழைக்காமல் பதவிக்கு வந்த அண்ணாமலை, பதவி கிடைத்தவுடன் தலை, கால் புரியாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சொல்ல, ‘’காலில் விழுந்து பதவி வாங்கிய அவருக்கு என்னைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?’’என்று கடுமையான பதிலடி கொடுத்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
அண்ணாமலையின் பேச்சில் இவ்வளவு கடும் சொற்கள் தேவையில்லை என்று அவரது கட்சியில் உள்ள முன்னாள் தலைவர் தமிழிசையே அறிவுறுத்தினார்.
அண்ணாமலையின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் அவரது உருவபொம்கைகளை எரித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி சீமானோ, ‘’தம்பி அண்ணாமலை…ஆளுகிற கட்சியில் மாநில தலைவராக வந்து உட்கார்ந்ததால் உங்களுக்கு மதிப்பு வந்துவிட்டது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியல்ல; சாதாரண தொண்டனாக இருந்து கட்சி நிர்வாகி ஆகி சட்டமன்ற உறுப்பினர் ஆகி, அமைச்சராக இருந்து வளர்ந்தவர். அவரைப்போய் தகாத வார்த்தைகளால் பேசக்கூடாது. இப்போது இருப்பவர்களிலேயே அவர் நல்ல புத்திசாலி. அரசியலில் விமர்சித்துக்கொள்ள வேண்டியதுதான். ஆனால் தம்பி அண்ணாமலையின் சொல் கடுமையாக இருந்தது. அதனால்தான் சொல்கிறேன்’’என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி இருந்தார் .
இதற்காக சீமானுக்கு நன்றி தெரிவித்து சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி துணைச்செயலாளர் மணிமாறன், ’’அரைவேக்காடு அண்ணாமலைக்கு புரட்சித்தமிழரின் பெருமைகளை சொல்லிய சீமானுக்கு அதிமுக தொண்டர்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்!’’ என்று தெரிவித்து போஸ்டர் அடித்து அந்த போஸ்டர்களை அவரே ஒட்டி இருக்கிறார்.