நான் சாதி பாகுபாடு பார்ப்பதாக என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அவரது கருத்துக்கள் சாதிப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைதுக்கு பிறகு சீமான் இவ்வாறு பேசினார். சீமானுடன் சேர்ந்து சாட்டை துரைமுருகன், இடும்பாவனம் கார்த்தி ஆகியோரும் என்னையும் என் குடும்பத்தினரையும் இழிவுபடுத்தி பேட்டி கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பெயர் தெரியாத 14 பேர் இழிவுபடுத்தி பதிவிட்டனர். இவர்கள் மீது தில்லை நகர் போலீசில் புகார் அளித்தும், பெயர் தெரியாத அந்த 14 பேரின் எக்ஸ்தள ஐடிக்கள் விசாரணைக்கு தேவை. அப்போதுதான் விசாரணையை மேற்கொள்ள முடியும்.
எனது மற்றும் என் குடும்பத்தினர் தொடர்பான பதிவுகளை நீக்க வில்லை என்றால் எனக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுவிடும். அதனால் ஆட்சேபனைக்குரிய பதிவுகளை எக்ஸ் தளம் நீக்குமாறு உத்தரவிட வேண்டும். உரிய தகவல்களை தராத அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார் திருச்சி எஸ்.பி. வருண்குமார்.
திருச்சி தில்லை நகர் போலீசார் கேட்ட தகவல்களை தருமாறு எக்ஸ் கார்ப்பரேஷனுக்கு உத்தரவிடவேண்டும். என் புகார் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்றூ திருச்சி தில்லை நகர் போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அந்த அனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
..