நாம் தமிழர் கட்சியில் இருந்து அதிருப்தியில் பலரும் அவ்வப்போது வெளியேறி வருகின்றனர். இதில் வெற்றிக்குமரன் என்பவர் தனிக்கட்சியே தொடங்கினார். அந்த வகையில் பிரபாகரன் என்பவர் நாதகவில் இருந்து விலகியவர்களை ஒன்றிணைத்து ‘புதிய தமிழ் தேசிய இயக்கம்’ கட்சியை தொடங்க உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
கிருஷ்ணகிரி நாதக மண்டல ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், ’’எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ தெரியவில்லை. சீமான் கிட்ட வந்து மாட்டி 14 வருஷ வாழ்க்கைய இழந்துட்டோம். கட்சியில் தன்னை விட யாரும் வளரக் கூடாது என்று சீமான் நினைக்கிறார். வளர்ந்தால் ஆட்களை வைத்து அடக்குகிறார். 14 ஆண்டுகளாக உழைத்த எங்களுக்கு வேட்பாளராக யாரை நிறுத்த வேண்டும் என்று தெரியாதா? சீமானை நம்பி எங்கள் இளமைக் காலமே போய்விட்டது.
நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி கொடுத்தால் பாக்யராஜ் என்ற தனிநபரின் பெயரில் கட்சியை பதிவு செய்துள்ளார். ரூ.2.5 லட்சம் வாடகையில் வீடு, 15 வேலை ஆட்கள் என்று சொகுசாக வாழ்கிறார்.
பொதுக்குழு,செயற்குழு என்ற பெயரில் எங்களை அழைத்து கையெழுத்து மட்டுமெ வாங்குகிறார்.
கட்சிக்காக சிறை சென்றால் காப்பாற்ற கூட நடவடிக்கை எடுப்பதில்லை சீமான். கட்சிக்காக உழைத்த பழைய நிர்வாகிகளை ஒதுக்கிவிடுகிறார் சீமான் ’’ என்று குமுறி இருக்கிறார். ‘’இளைஞர்கள் யாரும் சீமானை நம்பி வாழ்க்கையை கெடுத்துக்காதீர்கள்’’ என்று எச்சரிக்கிறார்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘’பணக்காரர்கள் அழைத்தால் அந்த நிகழ்ச்சிகளுக்கு மட்டும் செல்லும் சீமான், நாதக குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை’’ என்று வெடிக்கிறார்.
’’மீண்டும் அவர் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லை என்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய கட்சி அமைப்பேன்’’ என்று எச்சரிக்கிறார்.