வருண்குமார் ஐபிஎஸ் எத்தனை நோட்டீஸ் அனுப்பினாலும் அதை எல்லாம் கிழித்து தன் வீடு குப்பை தொட்டிகளில் போட்டுவிட்டு கடந்துவிடுவேன் என்று பதில் கொடுத்திருக்கிறார் சீமான்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் கைதின்போது போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் இன்னமும் திருப்பிக் கொடுக்கப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதற்கிடையில் அந்த செல்போனில் இருந்து சீமான் பேசிய ஆடியோக்கள் எடுக்கப்பட்டு அவை சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாம் தமிழர் கட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தின.
இதற்கெல்லாம் காரணம் திருச்சி எஸ்.பி. வருண்குமார்தான் என்று அவரைக்கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்தன. இதற்கு வருண்குமார் கண்டனம் தெரிவித்து வந்தார். நாம் தமிழர் கட்சியினர்தான் தன்னையும், தனது குடும்பத்தினரையும் ஆபாசமாக பேசி வருகிறார்கள் என்றும், சீமான் சொல்லித்தான் அவர்கள் இவ்வாறு செய்து வருவதாகவும் வருண்குமார் குற்றம் சாட்டினார்.
சீமானும் நாம் தமிழர் நிர்வாகிகளும் இந்த குற்றச்சாட்டை மறுத்து வந்தனர். ஆனாலும் சீமான் உள்பட 22 நாம் தமிழர் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 2 பேரை கைது செய்தார் வருண்குமார்.
தன்னையும் தன் குடும்பத்தினரையும் ஆபாசமாக திட்டி நாம் தமிழர் பதிவிட்டதால் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 2 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் வருண்குமார் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதற்கு சீமான் மன்னிப்பு கேட்டு விளக்கம் அளித்ததாக 16 பக்க கடிதம் ஒன்று பரவியது. ஆனால், சீமான் இதுவரை யாரிடமும் மன்னிப்பு கேட்டது கிடையாது என்றும், அந்த விளக்கத்தை நாம் தமிழர் கட்சியின் மாநில செயலர் சேவியர் பெலிக்ஸ் சீமானின் அனுமதி இல்லாமல் தன்னிச்சையாக அனுப்பி விட்டார் என்று சொல்லி அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டார்.
இதன் பின்னர், தன்னையும் தன் குடும்பத்தினரையும் அவதூறாக பதிவிட்டவர்கள் இன்னும் அந்த பதிவை நீக்கவில்லை என்றும், இந்த இணைய கூலிப்படைகளை ஒடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ள வருண்குமார், அதுவரைக்கும் சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக 8 பக்க அறிக்கையும் வெளியிட்டுள்ளார். ஆபாசம் மற்றும் அவதூறு பரப்பிய 51 கணக்குளையும் வெளியிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரப்போவது உறுதி என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் மன்னார்குடி அருகே திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமானிடம் இதுகுறித்து கேள்வி எழுப்ப, ‘’ என் மீது ஏற்கனவே 138 வழக்கு இருக்கிறது. இதை மாற்றி 200 வழக்காக மாற்ற நினைக்கிறார். டபுள் செஞ்சுரி அடிக்கட்டும் சீமான். வரலாற்றில் இடம்பெறட்டும் என்று நினைக்கிறார் . அவர் ஐபிஎஸ் அதிகாரியாக மட்டும் இயங்க வேண்டும்.
நான் பார்க்காத வழக்கா? அதிகாரத்தில் நீ ஒரு புள்ளி. நான் அந்த அதிகாரத்தையே எதிர்த்து சண்டை செஞ்சிக்கிட்டு இருக்கேன். அகில உலகத்தையே எதிர்த்து சண்டை செஞ்ச தலைவரின் மகன் நான். நீ ஒரு ஓரமா நின்னு விளையாடிட்டு போ. நீ வழக்குதான் போடு என்னத்தையாவது போடு. எத்தனை நோட்டீஸ்தான் அனுப்பு. என் வீட்டில் 5,6 குப்பைக்கூடைகள் இருக்குது . அதுல கிழிச்சி போட்டுட்டு போயிடுவேன்’’ என்றார்.