திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சேகர் ரெட்டி மூலம் காணிக்கை குவிகிறது.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தொண்டான் துளதி கிராமத்தில் பிறந்தவர் செகர் ரெட்டி. வேலூரில் இருந்து சென்னை ஐசிஎப்’க்கு ரயிலில் தினக்கூலியாக வந்து சென்ற இவரின் வாழ்க்கை, ரயில்வே காண்ட்ராக் வேலை மூலம் உயர்ந்தது. ரயில்வே யூனியன் தலைவர் மூலமாக வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியிலான வேலைகளை செய்யும் ஒப்பந்தம் பெற்று உயர்ந்தார்.
இந்த செல்வாக்கில் 1994ல் அதிமுகவின் உறுப்பினர் ஆனார். 2001, 2006 காலகட்டத்தில் அதிமுகவில் வலம் வந்த இவர், அதன் மூலம் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுடன் நெருக்கமாக இருந்தார். ஜெயலிதாவுக்காக திருப்பதியில் சிறப்பு பூஜைகள் செய்து போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். திருப்பதியில் இருந்து விசேஷ நாட்களில் கார்டனுக்கு காரில் லட்டு கொண்டு வந்து கொடுத்து அமைச்சர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டார்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்த பணிகளுக்கு ஆர்டர் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஐஏஎஸ் அதிகாரி ர் ராமமோகனராவின் ஆலோசனையின் படி மணல் குவாரிகள் அரசுடமை ஆனதால் அதில் நல்ல லாபம் பார்த்தார். திருப்பதி தேவஸ்தான தேவசம் போர்டு உறுப்பினர் ஆனார்.
ஓ.பன்னீர்செல்வத்துடன் நெருங்கிய நட்பு வட்டத்திற்குள் இருந்த சேகர் ரெட்டி, ஜெ., மறைவுக்கு பின்னர் சிபிஐ ரெய்டில் சிக்கினார். அந்த ரெய்டில் 96 கோடியே 89 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும், 9 கோடி 63 லட்சம் புதிய 2 ஆயிரம் நோட்டுகளும், 36 கோடி ரூபாய் மதிப்புள்ள 127 கிலோ தங்கமும் சிக்கின. கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 142 கோடி ரூபாய் என்று வருமான வரித்துறை அறித்திருந்தது.
திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் ஆலோசனைக்குழு தலைவராக சேகர் ரெட்டி நியமிக்கப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் வேலூரில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைந்துள்ளது. இங்கு 5 கோடி மதிப்பீட்டில் வெங்கடாஜலபதி சுவாமி ஆலய விரிவாக்கம் செய்வதற்காக ஏசிஎஸ் அறக்கட்டளை சார்பாக ஏசிஎஸ் அருண்குமார் 60 லட்சம் ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார். கடந்த வருடம் சென்னை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்டாதனத்தில் வெங்கடாசலபதிக்கு ஆலயம் கட்டுவதற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக வேந்தர் ஏசி சண்முகம், ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கினார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேலூரில் போட்டியிட்டுள்ளார் ஏ.சி.சண்முகம்.