கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அதிமுக அறிவித்தால் 2026ல் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமையும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதும் போதும், வந்து அவன் இவன் என்று ஒருமையில் கடுமையாக பேசி அண்ணாமலையை ஒரு பிடி பிடித்துவிட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜு.
மதுரை மாவட்டம் பரவை கிராமத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பேசிய செல்லூர் ராஜூ , பாஜகவையும் அண்ணாமலையையும் கடுமையாக விளாசித்தள்ளினார். சண்டாளன் என்றப்பெயரை யாரும் உச்சரிக்கக்கூடாது என்று தமிழ்நாடுஅரசு அரசாணை வெளியிட்ட பின்னரும் ‘சண்டாளப்பயலே…’’ என்று அண்ணாமலையை பேசினார் செல்லூர்ராஜூ.
நேற்று பெய்த மழையில் பெய்த காளான் என்றும், அது தறுதலை என்றும், வாய்க்கொழுப்பு அதிகம் என்றும், அண்ணாமலையை விளாசி எடுத்த செல்லூர் ராஜூ, இப்படி பேசிப் பேசித்தான் தனிப்பெருங்கட்சியாக இருந்த பாஜகவை மைனாரிட்டி கட்சியாக மாற்றிவிட்டார் அண்ணாமலை என்றார்.
சீட் கேட்டு அண்ணாமலையிடம் போய் அதிமுக நிற்க வேண்டுமாம். 52 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 31 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சி இந்தியாவிலேயே அதிமுகதான். அப்படிப்பட்ட கட்சி அண்ணாமலையிடம் போய் சீட் கேட்டு நிற்க வேண்டுமா? அப்படி ஒரு நிலை வந்தால் செத்துப்போய்விடுவோம் என்று ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பேசினார் செல்லூர் ராஜூ.
செல்லூர் ராஜுவின் இந்த பேச்சு அண்ணாமலையை ரொம்பவே கோபப்படுத்தி இருக்கிறது. அதனால்தான், ‘’அண்ணாமலையை அவதூறாக பேசிவிட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சென்று புகாரளித்துள்ளனர்.