மதுரை அதிமுகவின் கோட்டை. அது 3வது இடத்துக்கு போகும்போது எங்களுக்கே மன உளைச்சல்தான். சிறுபான்மையினர் இன்னும் எங்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளவில்லை. ’’ என்கிறார் செல்லூர் ராஜூ.
ஓபிஎஸ்சின் சிலிப்பர் செல்லாக இருக்கிறார் செல்லூர் ராஜூ. அதனால்தான் அவர் அதிமுகவுக்கு வேலை செய்யாமலும், யாரையும் வேலை செய்ய விடமாலும் தடுக்கிறார். அதிமுகவின் கோட்டையாக இருந்த மதுரையை மூன்றாம் இடத்திற்கு போகும் அளவுக்கு செய்துவிட்டார்.
நடந்த மக்களவை தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனுக்கு செல்லூர் ராஜூ சரியாக வேலை பார்க்கவில்லை. தனது ஆதரவாளர்களையும், தனக்கு கீழ் உள்ள அதிமுக நிர்வாகிகளையும் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக வேலை செய்ய விடவில்லை. மீறி வேலை செய்தவர்களையும், அவர் வெற்றி பெற்றால் வேறு கட்சிக்கு சென்றுவிடுவார் என்று எச்சரித்து வேலை செய்ய விடாமல் தடுத்துவிட்டார். இதனால்தான் மதுரையில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது என்று மதுரை சென்ற எடப்பாடி பழனிச்சாமியிடமே புகார் கடிதம் கொடுத்திருக் கிறார்கள். இதையடுத்து செல்லூர்ராஜூவின் முன்னாள் உதவியாளர் இராம சுப்பிரமணியனிடம் நேரிலேயே விசாரித்திருக்கிறார் எடப்பாடி என்று தகவல் பரவி வருகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ’’நாங்க என்ன காமராஜரா? எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? இல்லையே. அதனால நாங்களும் கூவி கூவித்தான் அழச்சோம். வேகாத வெயில்ல எல்லாம் அழைஞ்சு அந்த சரவணனுக்காக வாக்கு கேட்டோம். கழகத்தொண்டர்களும் பம்பரமாகத்தான் பணியாற்றினாங்க. இதுக்கு மேல எப்படி ஒரு கட்சியில வேலை பார்க்க முடியும்?
குறிப்பிட்ட சமுதாயம் மோடிதான் இந்தியாவை ஆள வேண்டும் என்று ஓட்டு போட்டாங்க. சிறுபான்மையினர் சிலர் ராகுலை கொண்டு வர வேண்டும் என்று அந்த கூட்டணிக்கு ஓட்டு போட்டுட்டாங்க. இதுக்கு இடையில நாங்க அடிபட்டுட்டோம். இது மதுரையில மட்டுமில்ல; தமிழ்நாடு முழுவதும் பிரதிபலித்தது.
மதுரை மாநகராட்சியில் மட்டும் ஓட்டு குறையல தமிழ்நாடு முழுவதுமே இதே நிலைமைதான். மதுரையில் வாங்கியதை காட்டிலும் மற்ற இடங்களில் குறைவாக ஓட்டு வாங்கியிருக்குது அதிமுக.
பத்திரிகைகளில் வருவது மாதிரி அரைப்பக்கம் செய்தி போடுற அளவுக்கு எல்லாம் பொதுச்செயலாளர் எதுவும் பேசல. மற்றபடி மதுரை அதிமுகவின் கோட்டை. 3வது இடத்துக்கு போகும்போது எங்களுக்கே மன உளைச்சல்தான். சிறுபான்மையினர் இன்னும் எங்கள் மீது முழு நம்பிக்கை கொள்ளவில்லை. ’’ என்றார் செல்லூர் ராஜூ.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்கிறது என்று மக்கள் இன்னும் நம்புகின்றனர். அதனால்தான் சிறுபான்மையினர் வாக்குகள் சிதறிப்போய்விட்டது என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர்ராஜூ சொல்லி இருக்கும் நிலையில் அதை ஒப்புக்கொண்டது மாதிரி அப்படியே பேசி இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.