
எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்ததற்கு செங்கோட்டையன் சொன்ன காரணம் சரியானதுதான் என்று சொல்லும் அதிமுகவினர், செங்கோட்டையன் சொன்னதன் பின்னணி அதுவாக இருக்க வாய்ப்பில்லை என்றே சொல்கின்றனர்.
ஒன்றுபட்ட அதிமுகவை, அதிமுகவினர் விரும்புகிறார்களோ இல்லையோ, பாஜக ரொம்பவே விரும்புகிறது. என்னதான் அதிமுக ஒன்றும் பிளவுபடவில்லை என்று எடப்பாடி பழனிசாமி சமாளித்து வந்தாலும் உண்மை நிலவரம் அதுவல்ல.
செங்கோட்டையன், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 6 பேர் எடப்பாடியை அவரது வீட்டில் சந்தித்து, அதிமுக ஜெயிக்க வேண்டுமென்றால், நீங்கள் முதல்வர் ஆக வேண்டும் என்றால் ‘ஒன்றுபட்ட அதிமுக வேண்டும்’ என்று வலியுறுத்தினர்.

இந்த சந்திப்பு குறித்த தகவல் பரவியதும், ”ஆமாம், அதிமுக ஒற்றுமைக்காக பேசினோம்” என்று வெளிப்படையாகச் சொன்னார் செங்கோட்டையன். ஆனால் எடப்பாடியோ, இந்த சந்திப்பையே மறுத்தார். இதனால் அந்த 6 பேருக்கும் கடும் அதிருப்தி. சந்திப்பையே மறுக்கிறார் என்றால், நாம் வைத்த கோரிக்கையினையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்று தெளிவானதால் அவர்களுக்கும் மன வருத்தம் ஏற்பட்டது.
அந்த 6 பேரில் அரசியல் அனுபவத்தில் மூத்தவர் செங்கோட்டையன். அவர்தான் அதிகம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் எடப்பாடிக்கு. இதனால் அந்த சந்திப்புக்கு பிறகு செங்கோட்டையனைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்திருக்கிறார் எடப்பாடி.
கள ஆய்வுக்குழுவில் வேண்டுமென்றே செங்கோட்டையனை தவிர்த்திருக்கிறார் எடப்பாடி. செங்கோட்டையனுக்கு எதிராக நிற்பவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் எடப்பாடி. இப்படி கட்சியில் தன்னை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறார் எடப்பாடி என்று வருத்தப்பட்ட செங்கோட்டையன், எடப்பாடிக்கு பாடம் புகட்டவே இப்படி ஒரு ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதே நேரம் செங்கோட்டையன் பின்னணியில் பாஜக உள்ளது. பாஜகவுக்காக கட்சியை பகடைக்காயாக பயன்படுத்த மாட்டார் செங்கோட்டையன். எடப்பாடியை தங்கள் வழிக்கு கொண்டு வரவே இந்த அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் அவர் என்கின்றனர்.

ஒருவேளை, ஒன்றுபட்ட அதிமுகவுக்கு இனிமேலும் எடப்பாடி ஒத்து வரவில்லை என்றால் அவரை நகர்த்திவிட்டு அந்த இடத்தில் செங்கோட்டையனை வைத்துவிடுவது என்று முடிவெடுத்து பாஜக காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது என்கிறது அதிமுக தரப்பு. டெல்லியில் பாஜக பிரமுகர்களை சந்தித்த டிடிவி தினகரன், அதிமுகவில் ஒருங்கிணைப்புக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் எடப்பாடியை ஒதுக்கிவிட்டு புதிய தலைமை அமைக்கப்படும் என்று சொன்னதையும் நினைவுபடுத்துகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வீட்டில் நடந்த ரெய்டு இன்னும் உயிர்ப்புடன் தான் உள்ளது. அந்த ரெய்டின் அடிப்படையில் எப்போது வேண்டுமானாலும் விசாரணை நடைபெறலாம். யார் மீதும் எப்போதும் வழக்கு பாயலாம் என்ற நிலை இருக்கிறது. மேலும், அதிமுக சின்னம் இரட்டைஇலை வழக்கை இன்னமும் உயிர்ப்புடன் வைத்துள்ளது பாஜக.
எடப்பாடி தங்கள் வழிக்கு வரவில்லை என்றால் இந்த வழக்குகளை அவருக்கு எதிராக திசை திருப்பவும், செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் ஆக்கவும் செய்யும் என்கின்றனர் அதிமுகவினர்.
தான் தான் என்கிற அகந்தையில் இனிமேலும் ஆட்டம் போட முடியாத அளவுக்கு பாஜக கடிவாளம் போட்டிருப்பதால்தான், ‘’எடப்பாடியின் கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை’’ என்று சொல்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
அதிமுக – தவெக கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த நிலையில், செங்கோட்டையன் மூலமாக அதிமுகவில் கலகத்தை தூண்டுவது யார்? பின்னணியில் உள்ளது யார்? என்ற விவாதம் எழுந்திருப்பது அதிமுகவினரைப் பொறுத்தவரையிலும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்கிறார்கள்.