
அவரைப் பொறுத்தைவரையிலும் சொன்னதைச் செய்து விட்டார் செங்கோட்டையன். கட்சியை ஒருங்கிணைக்காவிட்டால் பழனிசாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
கட்சியை ஒருங்கிணைக்காதது ஒரு புறம் இருக்க, ஒருங்கிணைப்பை வலியுறுத்தியதற்காக செங்கோட்டையனை கட்சியின் பொறுப்புகளில் இருந்தே விலக்கிவிட்டார் பழனிசாமி. இந்த கடுப்பில் இருந்த செங்கோட்டையன், தனது சொந்த தொகுதிக்கு இன்றைக்கு பழனிசாமி வருகிறார் என்று தெரிந்ததும், அவரை வரவேற்க மனமில்லாமல் சென்னைக்கு எஸ்கேப் ஆகிவிட்டார்.

சேலத்தில் இருந்து கார் பயணமாக கோபிசெட்டிபாளையம், சத்யமங்கலம் வழியாக இன்று நீலகிரி மாவட்டம் சென்றார் பழனிசாமி. வழியில் கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையனுக்கு பதிலாக புதிதாக நியமிக்கப்பட்ட ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் தலைமையில் அதிமுகவினர் திரண்டு பழனிசாமியை வரவேற்றனர். செங்கோட்டையனின் கோட்டையில் தனக்கு கிடைத்த வரவேற்பினால் உற்சாமடைந்த பழனிசாமி, காரை விட்டு இறங்கி தொண்டர்களின் வரவேற்பினை பெற்றுக்கொண்டார். இதனால் சுமார் அரை மணி நேரம் வரவேற்பினை பெற்றுக்கொண்டு அதன் பின்னர் சத்தியமங்கலம் சென்றார்.
பழனிசாமியை சந்திப்பதை தவிர்க்கவே திடீரென்று சென்னை சென்றார் செங்கோட்டையன் என்பது கட்சியினர் அனைவருக்குமே தெரிந்த விசயம்தான். இதற்கு முன்பு கோவை பிரச்சாரத்திற்கு கோபி வழியாக சென்றபோதும் பழனிசாமியை வரவேற்கவில்லை செங்கோட்டையன்.

கோபியில் செங்கோட்டையன் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களும் பழனிசாமியை புறக்கணித்துள்ளனர்.
சென்னை வந்த செங்கோட்டையனுக்கு, சொன்னதைச் செய்துவிட்டோம் என்ற மகிழ்ச்சியை விட அதிர்ச்சியையே தந்திருக்கிறது கோபி.
கோபியில் பழனிசாமிக்கு அதிமுகவினர் திரண்டு சென்றதைக் கண்டு அதிருப்தியில் உள்ளார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் கோட்டையிலேயே கொடியை பறக்கவிட்டதில் பழனிசாமி ஏக சந்தோசத்தில் நீலகிரி சென்றிருக்கிறார்.
கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லாவிட்டாலும் கூட கூட்டணியில் ஒருங்கிணைப்பு இருக்கும் என்று அமித்ஷா சொல்லி இருக்கிறார் என்று தன் ஆதரவாளர்களிடம் சொல்லி தன்னை தேற்றிக் கொண்டிருக்கிறாராம் செங்கோட்டையன்.