
அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலர் இன்றைக்கு கட்சியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று தொண்டர்களின் மனநிலை உள்ளது. இணைப்புக்கு ஏதும் நிபந்தனை விதிக்கவில்லை. கட்சியில் இணைத்துக்கொண்டால் போதும் என்றுதான் ஓபிஎஸ் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆனால் பழனிசாமியோ, இணைப்பு என்பது சாத்தியமில்லாதது என்று தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறார்.

கட்சியின் மூத்த நிர்வாகிகள் பழனிசாமியிடம் வலியுறுத்தியும் கூட அவர் பிடிவாதமாக உள்ளதால், வேறு வழியின்றி பொதுவெளியில் இன்று இணைப்பை வலியுறுத்தி பழனிசாமிக்கு சவால் விடுத்திருக்கிறார் அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன்.
’’முரண்பட்டவர்களை கட்சியின் நலனுக்காக வீடு தேடிச்சென்று அழைத்தவர் எம்.ஜி.ஆர். அவரை விடவும் பெரிய தலைவர் உண்டா? அதே போன்று, தனக்கு எதிராக அரசியல் செய்தவர்களையே கட்சியின் நலனுக்காக தனது அருகிலேயே சட்டமன்றத்தில் அமரவைத்தவர் ஜெயலலிதா’’ என்று சொல்லி, கட்சியின் முன்னோடிகள் அப்படி பெருந்தன்மையுடன் இருந்த போதிலும் பழனிசாமி அதுமாதிரி இல்லையே. கட்சியினரை, பிரிந்தவர்களை அரவணைத்துச் செல்லவில்லையே என்பதை சூசகமாக சுட்டிக்காட்டினார் செங்கோட்டையன் .

நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சண்முகம் உள்ளிட்டோருடன் பழனிசாமி வீட்டுக்கு சென்று இணைப்பை வலியுறுத்தியதையும், இவர்களின் கோரிக்கையை பழனிசாமி பரிசீலிக்கவில்லை என்பதையுடம் அம்பலப்படுத்திய செங்கோட்டையன், மயிலே மயிலே என்றால் இறகு போடாது.. என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்.
அதனால்தான், மறப்போம் – மன்னிப்போம் என்ற அடிப்படையில் பிரிந்தவர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இதை செய்து முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை இணைக்கும் முயற்சியை என் போன்ற எண்ணம் உள்ளவர்களுடன் இணைந்து தானே மேற்கொள்ளப்போவதாக தெரிவித்தார்.

தான் விடுத்த இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் பழனிசாமியின் பரப்புரையில் பங்கேற்க மாட்டேன் என்று பகிரங்கமாகவே சொல்லிவிட்டார்.
செங்கோட்டையனின் இந்த கருத்துக்கு, ‘’ அதிமுக ஒன்றிணைய யார் குரல் கொடுத்தாலும் பக்கபலமாக இருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.
’’இணைப்பை மேற்கொள்ளாவிட்டால் பழனிசாமியை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’’ என்கிறார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட கே.சி.பழனிசாமி. செங்கோட்டையன் கருத்தை வரவேற்றுள்ளார் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைத்திலிங்கம்.