வேலுச்சாமிபுரம் சம்பவத்தில் விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை என்றும், தவெக என்ன மாதிரியான கட்சி? குழந்தைகளும், பெண்களும் உயிரிழந்து கிடக்கும் நிலையில் ஒருவர் கூட சம்பவ இடத்தில் இருந்து உதவி செய்யாமல் ஓடிவிட்டனர் என்று நீதிபதிகள் கடுமையாக சாடி இருகின்றனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல் ஓடிச்சென்ற தவெக நிர்வாகி ஆதவ் ஆர்ஜுனா, ‘’புரட்சி வெடிக்கும்’’ என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, பின்னர் அது சர்ச்சை ஆன நிலையில் டெலிட் செய்துவிட்டார். ஆனாலும் அந்த பதிவுக்காக ஏன் காவல்துறை அவரை கைது செய்யவில்லை என்று நீதிபதி வறுத்தெடுத்ததால் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது காவல்துறை.

விஜயின் பிரச்சார வாகனமே விதிமீறலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அந்த வாகனத்தால் நிறைய அசம்பாவீதங்கள் நடைபெறுகின்றன. அதனால் அந்த வாகனத்தை கைப்பற்றச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் காவல்துறை அந்த வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
தவெக இப்படி இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில் அக்கட்சியை வளைக்கத் துடிக்கிறது பாஜக என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கரூர் சம்பவம் நடந்ததுமே பாஜக ஆதரவாளர் குருமூர்த்தியுடன் விஜய் ஆலோசனை செய்தார் என்று தகவல் பரவியது. ஆனால் இதில் உண்மையில்லை என்று குருமூர்த்தி மறுப்பு தெரிவித்தார்.

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா பாஜக தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகத்தான் டெல்லி சென்றிருக்கிறார் என்றும் பேச்சு பரவியது. இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தலைவராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா, அது தொடர்பான நிகழ்வுக்காக உத்தரகாண்ட் சென்றிருப்பது கூட கண் துடைப்புதான். அவர் பாஜக தலைமையிடம் பேச்சு நடத்தவே சென்றிருக்கிறார்கள் என்கிறார்கள்.
இந்நிலையில், விஜய்யுடன் டெல்லியில் இருந்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் தொலைபேசி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்ற தகவல் பரவுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின் போது, கரூர் சம்பவ விவகாரத்தில் ’’விஜய்க்கு பாஜக துணை நிற்கும். ஆதரவாக இருப்போம்’’ என்றும் அந்த தலைவர் உறுதி அளித்திருக்கிறாராம்.

இந்த சூழலில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அவசர அவசரமாக டெல்லி சென்றிருக்கிறார். அண்ணாமலையின் இந்த டெல்லி விசிட்டும் கூட தவெக கூட்டணி தொடர்பாகத்தான் அமைந்திருக்கிறது என்றும் தகவல்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என்று பாஜக வட்டாரம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், கரூர் சம்பவத்திற்கு பிறகு அந்த விருப்பம் அழுத்தமாக மாறியிருக்கிறது என்றே தெரிகிறது.
