
அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்திக்க காரணம் ஒற்றைத் தலைமையே. ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டவரே தொடர் தோல்விகளுக்குக் காரணம். சூது, நம்பிக்கை துரோகத்தின் காரணமாக கட்சி தோல்வியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மனசாட்சி இல்லாமல் பேசுபவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று ஜெயலலிதாவின் பிறந்தாளில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஓபிஎஸ் வெடித்தார்.

இபிஎஸ்சின் அறிக்கைதான் ஓபிஎஸ்சை அப்படி வெடிக்கச் செய்திருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ், தினகரன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னாள் முக்கிய பிரமுகர்கள் அனைவருடன் இபிஎஸ் ஒன்றுபட வேண்டும் என்ற முயற்சிகள் நடந்து வரும் நிலையில், ‘’ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது’’ என்று இபிஎஸ் விட்ட அறிக்கைதான் ஓபிஎஸ்சின் அந்த ஆவேசத்திற்குக் காரணம்.
அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனும் முயற்சிகள் எடுத்து வருகிறார். இதை இபிஎஸ் ஏற்றுக்கொள்ளாததால் செங்கோட்டையனுக்கும் இபிஎஸ்க்கும் மறைமுக யுத்தம் நடந்து வருகிறது.

இன்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்துகிறார் இபிஎஸ். செங்கோட்டையன் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார்.
இந்நிலையில், இபிஎஸ் சொன்ன ஓநாய் யார்? வெள்ளாடு யார்? என்று செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்க, ‘’அதை அவரிடமே கேளுங்கள்’’’ என்று எரிச்சலாக சொல்லிவிட்டார் செங்கோட்டையன்.
qdnsi3