
அதிமுக மேலும் உடைகிறதா? என்ற அதிர்வுகளை எழுப்பி இருக்கின்றனர் செங்கோட்டையன் மற்றும் கோகுல இந்திரா. பாஜகவுடன் இபிஎஸ் கைகோர்த்ததுதான் இந்த கோபத்திற்கும் காரணம் என்கிறது எம்.ஜி.ஆர். மாளிகை.
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை கொண்டு வர கடந்த 2011ஆம் ஆண்டில் ரூ.3.72 கோடி நிதியளித்தார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தது.
இதற்காக அதிக்கடவு – அவிநாசி திட்ட கூட்டமைப்பு, பொதுமக்கள், விவசாயிகள் இணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று கோவை மாவட்டத்தில் அன்னூர் அடுத்த கஞ்சப்பள்ளியில் பாராட்டு விழா எடுத்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த இந்த பாராட்டு விழாவை அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் புறக்கணித்தது அக்கட்சிக்குள் பெரும் புயலை எழுப்பியது.

கட்சிக்குள் தனக்கு முக்கியத்துவம் இல்லை என்று தலைமை மீது அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் செங்கோட்டையனின் இந்த புறக்கணிப்பு தமிழக அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஓபிஎஸ்சிடம் இருந்து பிடுங்கிய முதல்வர் நாற்காலியை யாருக்கு கொடுப்பது? என்று நடந்த கூவத்தூர் ஆலோசனையில் செங்கோட்டையன் பெயரே பட்டியலில் முதலில் இருந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவர்கள் கேட்ட கப்பத்தை கட்ட வழி இல்லை என்று செங்கோட்டையன் சொன்னதால், அந்த நேரத்தில் அவர்கள் கேட்ட கப்பத்தை தன் சகாக்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மூலமாக கட்டிவிட்டு முதல்வர் நாற்காலியை வாங்கிக்கொண்டார் எடப்பாடி பழனிசாமி என்று பலரும் சொல்லி வந்த நிலையில், ‘’செங்கோட்டையன் அப்போது அமைச்சராக இல்லை. அவர் அமைச்சராக இருந்திருந்தால் அவருக்குத்தான் முதல்வர் பதவியை கொடுத்திருப்போம்’’ என்று இப்போது புதுக்கதை சொல்கிறார் அமமுக டிடிவி தினகரன்.

தனக்கு கிடைக்க வேண்டிய நாற்காலி கைவிட்டு போய்விட்டதே என்கிற ஆத்திரம் செங்கோட்டையனுக்கு இல்லாமல் இல்லை என்று சொல்லி வந்தனர். அதற்கேற்றார் போல் அடிக்கடி அதிமுக தலைமைக்கு எதிராக செங்கோட்டையன் உள்ளார் என்று செய்திகள் வரத்தொடங்கின.
அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருவதால் தொண்டர்கள் அதிருப்தியில் இருந்து வரும் நிலை அறிந்து, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட 6 பேர் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை கடந்த ஆண்டு சந்தித்து அதிமுகவுக்கு வெளியே இருக்கும் சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை இணைக்க வேண்டும். அப்போதுதான் கட்சி வலுப்படும் என்று சொல்ல, இதை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளவே இல்லை.

அது மட்டுமில்லாமல் அன்றிலிருந்து அந்த 6 பேருக்கும் கட்சியில் முக்கியத்துவம் குறையும்படியும், தனது ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும்படியும் செய்து வந்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இந்த நிலையில், கோவையில் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி படம் மட்டும் தான் உள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் இல்லையே என்ற குற்றச்சாட்டை சொல்லி புறக்கணித்திருக்கிறார் செங்கோட்டையன்.
விழா நடப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு விழா ஏற்பாட்டாளர்கள் தன்னை சந்தித்ததாகவும், அப்போது எங்களை உருவாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் மேடையில் இல்லை. இந்த திட்டம் வர காரணமானவர் ஜெயலலிதா. அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு நிறைய பாடுபட்டிருக்கிறார் தனபால். இவர்களை தவிர்த்து எடப்பாடி பழனிசாமியை மட்டும் முன்னிலைப் படுத்தியதால் விழாவை புறக்கணித்து, தன் உணர்வை வெளிப்படுத்தியதாகச் சொல்கிறார் செங்கோட்டையன்.

செங்கோட்டையனின் இந்த குற்றச்சாட்டுக்கு, ‘’இது கட்சி விழா அல்ல. பொது விழா. அதனால்தான் மற்றவர்களின் படங்கள் வைக்கப்பட வில்லை’ என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழுப்பலான பதிலைச் சொல்ல, வைகைச்செல்வனோ, ‘’எடப்பாடிக்கு எதிராக திரும்ப வேண்டும் என்று வைத்திருந்த ரொம்ப நாள் திட்டத்தை இப்போது இதை காரணமாகச் சொல்லி எதிர்த்திருக்கிறார்’’ என்கிறார்.
ஆனால், எம்.ஜி.ஆர். மாளிகை வட்டாரமோ தான் இருக்க வேண்டிய இடத்தில் இருந்துகொண்டு தன்னையே ஓரங்கட்டுவதை யார்தான் பொறுத்துக்கொள்வார்? அந்த கோபம்தான் செங்கோட்டையனுக்கு வந்தது.

அதுமட்டுமில்லாமல், அந்த பாராட்டுவிழாவில் பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜும் பங்கேற்றிருந்தார். அவருடன் இபிஎஸ் கைகோர்த்து சிரித்து நின்றதை கட்சியினர் யாரும் ரசிக்கவில்லை. பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்கப்போகிறது என்ற விமர்சனம் இருந்து வரும் நிலையில், இபிஎஸ்சின் இந்த செயல் செங்கோட்டையனை மேலும் கோபப்படுத்தி இருக்கிறது. ஜி.கே.நாகராஜ் அந்த பாராட்டு விழாவில் பங்கேற்கப்போவது முன்கூட்டியே செங்கோட்டையனுக்கு தெரிந்தது. அந்த விழாவை செங்கோட்டையன் புறக்கணிக்க இதுதான் முக்கியக்காரணம் என்கிறது.