
அதிமுகவின் சீனியர் தலைவர் செங்கோட்டையன் தொடந்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.
கட்சியின் நிர்வாகிகள் கூட்டம், நிர்வாகிகளின் இல்ல திருமணம் ஆகியவற்றில் பழனிசாமியை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்து வருகிறார் செங்கோட்டையன்.
பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன், தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார். வேலுமணி இல்ல திருமண வரவேற்பில் பழனிசாமி வந்து சென்ற பின்னர் வந்தார் செங்கோட்டையன். சட்டப்பேரவை கூடும் முன் சபாநாயகர் அப்பாவுவை தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார் செங்கோட்டையன்.
இப்படி அதிமுகவில் செங்கோட்டையன் தனி பாதையில் பயணிக்கிறார். இதுகுறித்து பழனிசாயிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, ‘’அதை அவரிடமே கேளுங்க’’ என்று சொல்லிவிட்டார். அவரிடமே கேளுங்க என்று சொன்னதால் செங்கோட்டையனிடம் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் எழுப்பிய கேள்விக்கு, ‘’இதுகுறித்து பேச வேண்டாம்’’ என்று சொல்லிவிட்டார் செங்கோட்டையன். ஏன் பேச வேண்டாம்? என்று எழுப்பிய கேள்விக்கு, பதில் சொல்ல மறுத்துள்ளார் செங்கோட்டையன்.

அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களோ, செங்கோட்டையனுக்கும் பழனிசாமிக்கும் இடையே பனிப்போர் எதுவும் நடக்கவில்லை. பிரச்சனை எதுவுமில்லை என்று சொல்லி வருகிறார்கள். பிரச்சனை எதுவும் இல்லை என்றால் அதை செங்கோட்டையுனும் பழனிசாமியும் சொல்லிவிட வேண்டியதானே? அவர்கள் ஏன் அதைச் சொல்லுவதில்லை என்று கேட்டால் பதில் சொல்ல மறுத்து, திமுகவில் பிரச்சனை ஏதும் இல்லையா? என்று கேட்டு சமாளிக்கப் பார்க்கிறார்கள்.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை பற்றி கேட்டால் ஏன் திமுக உட்கட்சி பிரச்சனைக்கு தாவுகிறீர்கள்? என்று கேட்டால் அதற்கு பதிலில்லை.
இது ஒரு புறமிருக்க, ’சாணக்யா’வின் 6ஆம் ஆண்டு விழாவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் செங்கோட்டையனும் பங்கேற்கிறார். இதைக்கண்டித்து பழனிசாமி ஆதரவாளர்கள் , ‘’திராவிட இயக்கத்தால் 50 ஆண்டுகளாக பதவியும் பலனும் பெற்று இனப்பகைவர்களுடன் கூட்டணி அமைக்கும் செங்கோட்டையன், சானக்யா ஆண்டு விழாவில் பங்கேற்க கூடாது’’ என்று கண்டன போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.
செங்கோட்டையன் பழனிசாமி இடையேயான மோதல் போக்கு வலுத்து வருவதால் அதிமுகவில் அடுத்த பிளவா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.