
பூனைக்கு மணிகட்டுவது யார்? என்ற தயக்கம் இருந்த நிலையில் செங்கோட்டையன் முன் வந்திருக்கிறார் என்கின்றனர் அதிமுகவினர். ஆனால் எடப்பாடி ஆதரவாளர் வைகைச் செல்வனோ, அதிமுகவில் தேவையில்லாமல் குழப்பத்தை விளைவிக்கின்றனர் என்கிறார்.
குழப்பத்தை ஏற்படுத்துவதே எடப்பாடி என்பதால்தான் அவருக்கு எதிராக இலேசாக வெடித்திருக்கிறார் செங்கோட்டையன்.
அதிமுக கட்சி தொடங்கியதிலிருந்து, அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆருடன் பழகிய பல சீனியர்கள் இருக்கும் போது இடையில் வந்த எடப்பாடி கட்சியை கைப்பற்றி சீனியர்களை உதாசீனப்படுத்தி வந்திருக்கிறார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் புறப்பட்டிருக்கிறார் செங்கோட்டையன் என்கிறது அதிமுக வட்டாரம்.
செங்கோட்டையன் கட்சியின் சீனியர். கட்சியில் பல நிலைகளிலும் அவரை உதாசீனப்படுத்தி, தனது ஆதரவாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தாராம் எடப்பாடி. இதனால் ‘நான் யார் தெரியுமா?’ என்று சொல்லவேண்டிய நிலைக்கு வந்திருக்கிறாராம் செங்கோட்டையன். அதனால்தான், மேடையில் மைக்கைப் பிடித்ததும், அதிமுக தொடங்கியதில் இருந்து இன்று வரையிலும் கட்சியில் தனது அனுபவத்தைச் சொல்லி, தன் தொகுதியில் மட்டுமல்லாது தமிழ்நாட்டு முழுவதிலும் உள்ள அதிமுக நிர்வாகிகளை பெயர் சொல்லி அழைக்கும் அளவிற்கு தனக்கு கட்சியில் அனுபவம் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லி இருக்கிறாராம்.

’’14 முறை எம்.ஜி.ஆரோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டவன், அவருக்கு சாரதியாக இருந்தவன். என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகாலம் இந்த அரசியலில் இருக்கிறேன் என்பதும், எத்தனை தலைவர்களை சந்தித்திருக்கிறேன் என்பதும் இந்த மக்களுக்குத் தெரியும். எம்.ஜி.ஆரின் வரலாறு என்பதே வேறு. அவரின் வழியில் வந்தவன் நான். அதை மறந்துவிடக்கூடாது’’ என்று செங்கோட்டையன் சொன்னதைக்கேட்டு கூட்டத்தினரும், இதை ஏன் சொல்கிறார்? என்று யாரும் நினைக்கவில்லையாம். எடப்பாடிக்குத்தான் இந்த பதிலடி என்றே முணுமுணுத்தார்களாம்.
தக்க தருணம் வந்ததும் எடப்பாடியை எகிறி அடிக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த செங்கோட்டையன், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களையே புறக்கணித்துவிட்டு தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்திக்கொண்டு எடப்பாடி செய்த அட்ராசிட்டியைக் கண்டு கொதித்துப்போய் எடப்பாடிக்கு பாடம் புகட்ட ஆரம்பித்திருக்கிறாராம் செங்கோட்டையன்.
அப்படி இருந்தும் மீண்டும் செங்கோட்டையனை ஓரங்கட்டும் விதமாகவே, ‘’செங்கோட்டையன் பேச்சை உதாசீனப்படுத்துங்க’’ என்று அதிமுக சீனியர் பொன்னையனை வைத்து பேச வைத்தாராம் எடப்பாடி.
இதனால் அதிமுகவை விட்டு வெளியேறப்போகிறார், அதிமுகவை கைப்பற்றி பொதுச்செயலாளர் ஆகப்போகிறார் என்றெல்லாம் செங்கோட்டையன் பற்றி செய்தி வரும் நிலையில், பதறிப்போய் அதை மறுத்து வருகின்றனர் எடப்பாடி ஆதரவாளர்கள்.
அதிமுகவை கைப்பற்றும் எண்ணம் எல்லாம் இல்லை. அதே நேரம் தொடர்ந்த உதாசீனப்படுத்தினால் நடப்பதே வேறு என்று எச்சரிக்கும் விதமாகவே, ‘’தெளிந்த சிந்தனையோடு இருக்கிறேன். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையில் இருக்கிறேன். என்னை சோதிக்காதீங்க’’ என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார் செங்கோட்டையன்.