சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூன் 13ம் தேதி அன்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் நாள் முழுவதும் விசாரணை நடத்திய அமலாக்கத்துறையினர் அவர் தொடர்புடைய இடங்களில் எல்லாம் சோதனை நடத்தினர்.
விசாரணை மற்றும் ரெய்டின் போது செந்தில்பாலாஜியை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. 17 மணி நேரம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். 14ம் தேதி அதிகாலையில் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது அவர் கடும் நெஞ்சுவலியால் துடிக்கவும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதன்பின்னர் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனால் அவர் இலாகா இல்லாத அமைச்சராக்கப்பட்டார்.
செந்தில்பாலாஜியை மீண்டும் அமைச்சராக தொடர்வதற்கு ஆளுநர் ஏற்காததால் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு அவரை அமைச்சராக அறிவித்தது. ஆனல் ஆளுநர் இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினும், தமிழக அரசியல் தலைவர்களும் எதிர்வினை ஆற்றினர். இதையடுத்து செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை ஆளுநர் திரும்ப பெற்றார்.
இந்த வழக்கில் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருப்பதால் செந்திலபாலாஜிக்கு ஜாமீன் தர மறுத்தது உயர்நீதிமன்றம். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சமூகத்தில் அதிகாரம் படைத்தவராக இருப்பதால் ஜாமீன் வழங்க மறுத்தது நீதிமன்றம்.
இதையடுத்து ஜாமீன்கோரி கடந்த மார்ச் 18ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விசாரணையில் அமலாக்கத்துறை தரப்பும் செந்தில்பாலாஜி தரப்பும் கடுமையான வாதங்கள் முன்வைத்தனர்.
மனுதாரர் 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார். இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. 58 முறை காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து நேற்று செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவரது வழக்கறிஞர்கள் சென்னை முதன்மை செசன்ஷ் நீதிமன்றத்தில் ஆஜராகி உச்சநீதிமன்றம் அளித்த உ த்தரவுப்படி இருநபர் உத்தரவாதம் அளிப்பதாக தெரித்தனர். அப்போது நீதிபதி கார்த்திகேயன், ‘’இருநபர் உத்தரவாதத்தை இந்த நீதிமன்றத்தில்தான் தாக்கல் செய்ய வேண்டும் உச்சநீதிமன்றம் குறிப்பிடவில்லையே என்று கேட்டதால் பரபரப்பு எழுந்தது. இதனால் செந்தில்பாலாஜி விடுதலையாவதில் தாமதம் ஆகுமா என்று அவரது ஆதரவாளர்கள் கருதினர்.
ஆனாலும் செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களோ, உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் குறிப்பிடவில்லை என்றாலும், பொதுவாக விசாரணை நீதிமன்றத்தில்தானே ஜாமீன் உத்தரவாத பத்திர தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்ல, அந்த வாதத்தை ஏற்று, இருநபர் உத்தரவாத்தை ஏற்றனர். செந்தில்பாலாஜியின் உறவினர்கள் சிவப்பிரகாசம், தியாகராஜன் இருவரும் அந்த உத்தரவாத்தை அளித்தனர்.
பல்வேறு நிபந்தனைகளுடன் தான் செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்குகிறது. அந்த நிபந்தனைகள் எல்லாம் தெரியுமா? என்ற கேள்விக்கு, இருவரும் தெரியும் என்ற பின்னரே, அவர்களின் இருநபர் உத்தரவாதத்தை ஏற்றார் நீதிபதி.
உத்தரவாதத்தை நீதிபதி ஏற்றதால் சிக்கல் விலகியது. செந்தில்பாலாஜியை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று புழல் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின்னர் வெளியே வந்துள்ளார் செந்தில்பாலாஜி.